தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என்று ட்வீட் செய்தவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு - உத்தரப் பிரதேசத்தில் சர்ச்சை

யோகி ஆதித்யநாத்

தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என்று ட்விட்டரில் பதிவிட்டவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. நாள் ஒன்றுக்கு 3.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஏராளமானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் உத்தரப் பிரதேசத்திலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று செய்திகள் வெளிவந்தன. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘உத்தரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று கூறும் தனியார் மருத்துவமனையின் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கைவிடுத்தார். இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷாசங் யாதவ் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விரைவாக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது என்று ட்விட்டரில் நடிகர் சோனு சூத்தை டேக் செய்து பதிவிட்டிருந்தார். ஷாசங் யாதவ்வின் பதிவை அவருடைய நண்பர் அன்கிட் ரீட்விட் செய்து தி வயர் செய்தித் தளத்தின் செய்தியாளர் அஃர்பா கானும் ஷெர்வானியை டேக் செய்தார்.

    அதனைத் தொடர்ந்து ஷெர்வானி, மத்திய அமைச்சரும் அமேதி தொகுதி எம்.பியுமான ஸ்மிருதி இராணியை டேக் செய்தார். அந்த ட்விட் பதிலளித்த ஸ்மிருதி இராணி, ‘நீங்கள் ஷேர் செய்த ஷாசங்கின் எண்ணுக்கு மூன்று முறை போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அமேதி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் மற்றும் அமேதி காவல்துறையிடம் இதுகுறித்து விசாரிக்க கூறியிருக்கிறேன்’ என்று பதிலளித்தார். அதனையடுத்து, ஸ்மிருதி இராணியின் ட்விட்டுக்கு பதிலளித்த செய்தியாளர் ஷெர்வானி, ‘ஷாசங்கின் தாத்தா உயிரிழந்துவிட்டார்’ என்று பதிலளித்தார். செய்தியார் ஷெர்வானிக்கு டேக் செய்த அன்கித்தும், ‘ஷாசங்கின் தாத்தா உயிரிழந்துவிட்டார். ஸ்மிருதி இராணியைத் தொடர்பு கொள்ள வைத்ததற்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    அதனையடுத்து, ஷெர்வானியின் ட்வீட்டுக்கு பதிலளித்தா மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அருண் குமார், ‘உயிரிழந்த ஷாசங்கின் தாத்தாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அவர், துர்காபூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்’ என்று பதிவிட்டுள்ளார். அதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் ஷாசங்கின் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் அரசு ஊழியரின் உத்தரவை மீறுதலுக்கான பிரிவு 188, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோய்களைப் பரப்பும் வகையில் அஜாக்ரதையாக இருத்தலுக்கான பிரிவு 269, பொதுமக்கள் மத்தியில் உள்நோக்கத்துடன் அச்சத்தை ஏற்படுத்துதல் பிரிவுக்கான 505 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஷாசங்கின் மீது தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர், ‘இது வெறும் கண்டனம் தெரிவிக்க கூடிய விவகாரம் மட்டுமல்ல. சமூக வலைதளங்களில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்வது சட்டப்படியும் குற்றமாகும்’ என்று தெரிவித்துள்ளனர்.

    தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பைக் கடந்த வேறு சில மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் ஆக்ஸிஜன் தேவை இருந்துவருகிறது. ஷாஸ்சங்கும் அவருடைய ட்விட்டர் பதிவில் கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடவில்லை. அதனை ரீட்விட் செய்த யாரும் கொரோனா பாதிப்பு என்று குறிப்பிடவில்லை. இந்தநிலையில், அவசர தேவையின் நிமித்தம் ஆக்ஸிஜன் தேவை என்று ட்வீட் செய்தவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: