அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி

அமெரிக்காவில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அனுமதி..

அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்த, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

  • Share this:
    உலக அளவிலான கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையை எட்டியுள்ளது. கொரோனா தொற்றைத் தவிர்க்க, தடுப்பூசி செலுத்துவதை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தநிலையில் அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் பைசர் தடுப்பூசியை செலுத்த, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள இது முக்கியமான முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கனடாவில் கடந்த வாரம் 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் அமெரிக்கா இதனை அறிவித்துள்ளது. அமெரிக்காவில், தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இதனிடையே ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்திக் கொண்டாலே, கொரொனாவால் உயிரிழக்கும் அபாயம் 80 சதவிகிதம் வரை குறைவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில், புதிய அறிகுறிகளுடன் தொற்று உறுதியானவர்கள் மற்றும் தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்குள் உயிரிழந்தவர்களின் விவரங்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடல் நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

    மேலும் படிக்க... இஸ்ரேலின் அதிகாலை வான்வழித் தாக்குதல்: காசாவில் 35 பேர் பலி

    அந்த ஆய்வு முடிவில், முதல் ஆஸ்ட்ராஜெனகா டோஸ் 80 சதவிகிதம் அளவிற்கும், இரண்டாவது டோஸ் 97 சதவிகிதம் அளவிற்கும் உயிரிழப்பு அபாயத்தை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த தடுப்பூசியால் இங்கிலாந்தில் இதுவரை 10000 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: