கொரோனா தடுப்பு மருந்து ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக ஊசிகள் மூலமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி கிடங்குக்கு வரும்பொழுது 10 பேருக்கு செலுத்த வேண்டிய தடுப்பு மருந்து ஒரு குப்பியில் இருக்கும். இந்த குப்பியை திறந்த பிறகு நான்கு மணி நேரத்திற்குள் அதிலிருக்கும் தடுப்பு மருந்தை செலுத்தியாக வேண்டும். எவ்வளவு குளிரூட்டும் வசதிகள் இருந்தாலும் அதற்கு மேல் அதனை பதப்படுத்தி வைக்க முடியாது. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வருபவர்கள் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது குறைவாக இருந்து வரும் நிலையில், பல தடுப்பூசி மையங்களில் ஒரு குப்பியை திறந்த நான்கு மணி நேரத்துக்குள் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த இயலாத நிலையே காணப்படுகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் வியாழக்கிழமை வரை 6 விழுக்காடு, அதாவது 13,191 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வீணாவதை தவிர்க்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்திருக்கிறார். கொரோனா தடுப்பூசி வீணாவதை தவிர்க்க யாருக்கு தடுப்பூசி என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.