Corona | கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருத்துவ கிட் வழங்க ஃபிளிப்கார்ட்டுடன் கைகோர்த்த லக்னோ நிர்வாகம்

மாதிரிப் படம்

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனை நிரம்பி வழிவதால் பலர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்கள் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி திணறி வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களை விட வடஇந்திய மாநிலங்களில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, அதிக உயிரிழப்புகள், இறந்தவர்களின் சடலங்களை எரிக்க இடமின்றி வரிசையில் கிடத்தி வைப்பது உள்ளிட்ட பல துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனை நிரம்பி வழிவதால் பலர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதார ஊழியர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ள அந்த மாநிலத்தின் லக்னோ மாவட்ட நிர்வாகம், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருத்துவ கருவிகளை வழங்க ஆன்லைன் ரீடெயில் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்துள்ளது. வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ கருவிகள் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை அறிந்த லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் ரோஷன் ஜேக்கப், ஃபிளிப்கார்ட் மூலம் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் இலவச மருத்துவ கருவிகள் சரியாக போய் சேர நடவடிக்கை எடுத்துள்ளார். லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டாக பொறுப்பு வகித்த அபிஷேக் பிரகாஷ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில், சமீபத்தில் தான் ரோஷன் ஜேக்கப் லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். ஃபிளிப்கார்ட் பிரதிநிதிகளை அழைத்து பேசிய மாவட்ட மாஜிஸ்திரேட் ரோஷன் ஜேக்கப், வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ கருவிகளை விரைவாக வழங்குவதற்கான கூரியர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

Also read... கோவிட் 19 - மருத்துவமனை இடவசதி, ஆக்சிஜன் உதவி எளிதாக கிடைக்க சிறந்த வழி இதோ

காரணம் என்ன?

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் இந்த கிட்டில் இருக்கும். கடந்த 13 நாட்களாக லக்னோவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 5,000க்கு மேல் பதிவானது. சமீபத்தில் ஒருநாள் பாதிப்பு 5,187 எட்டிய அன்று மாவட்டத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகிவிட்டது. இவர்களில் பெரும்பாலோர் (90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள்) அரசு மற்றும் தனியார் கோவிட் மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள படுக்கை பற்றாக்குறையால் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர். மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள படுக்கை பற்றாக்குறை காரணமாக வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள கோவிட் நோயாளிகள் நிபுணர்களின் ஆலோசனை, ஆக்ஸிஜன், மருந்துகள் என தகுந்த உதவிகள் கிடைக்காமல் மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு இலவச மருத்துவ கருவிகளை வீடு தேடி சென்று வழங்க கூரியர் சேவைகளை அறிமுகப்படுத்திய ரோஷன் ஜேக்கப் கூறுகையில், லக்னோவில் வீடுகளில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவ, முதல் நாளில் கூரியர் டெலிவரி குழுவை சேர்ந்த 15 பேர், 1,125 வீடுகளுக்கு சென்று மருத்துவ கருவிகளை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறினார். மாநில தலைநகரான லக்னோவில் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் இலவச மருத்துவ கருவிகள் வழங்க மேலும் 40 குழுக்களை பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் நோயாளிகளுக்கு உதவ ஒரு சிறிய குழுவை உருவாக்கிய அலோக் என்பவர் கூறுகையில், "வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கான வீட்டு விநியோக சேவைகளை ஆரம்பித்தமைக்கு ரோஷன் ஜேக்கப்பிற்கு நன்றி. இதே போல வீட்டு தனிமைப்படுத்தலில் துன்பப்படுபவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரத்யேக மருத்துவர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சப்ளையர்களை ஏற்பாடு செய்தால் இன்னும் பலரது உயிரை காப்பாற்றலாம்"என்று கோரிக்கை வைத்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: