WHO அமைப்புக்கான நிதியுதவியை நிறுத்தும் டிரம்பின் அறிவிப்பு: ஐ.நா. அதிருப்தி..!

டிரம்ப்

உலக சமூகம் மொத்தமும் இணைந்து கொரோனாவை வீழ்த்த வேண்டிய நேரம் இது - ஐ.நா.

  • Share this:
    உலக சுகாதார நிறுவனத்திற்கோ, பிற மனிதநேய அமைப்புகளுக்கோ நிதியுதவியை நிறுத்த இது உகந்த நேரம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதை அடுத்து ஐநா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

    கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் முறையாக செயல்படவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப், அந்நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

    உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டு தோறும் சுமார் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை அமெரிக்கா நிதி அளித்து வருகிறது. இது உலக நாடுகள் அளிக்கும் மொத்த நிதியில் 22 சதவிகிதம் ஆகும். ஆனால் சீனா வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே நிதி அளிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்

    இந்த அறிவிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரெஸ், உலக சுகாதார நிறுவனத்திற்கோ, பிற மனிதநேய அமைப்புகளுக்கோ நிதியுதவியை நிறுத்த இது உரிய நேரமல்ல எனத் தெரிவித்துள்ளார். உலக சமூகம் மொத்தமும் இணைந்து நின்று கொரோனாவை வீழ்த்த வேண்டிய நேரம் இது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    டிரம்பின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க மருத்துவ கழகம், தவறான பாதையில் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆபத்தான முடிவு என கூறியுள்ளது.

    உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் பெற வேண்டிய இந்த தருணத்தில்,  அந்நிறுவனத்திற்கான ஆதரவை உலக நாடுகள் தொடர வேண்டும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வலியுறுத்தியுள்ளார்.

    டிரம்பின் நடவடிக்கை ஆழ்ந்த வருத்தம் அளிப்பதாகவும், இதனை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பே இல்ல என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.

    டென்மார்க்கில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    முகக்கவசம், கையுறைகள் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தினர். உரிய பாதுகாப்பு நடைமுறைகள் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Vaijayanthi S
    First published: