தனது ரூ.22 லட்சம் பெறுமான ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைத்த மும்பை ‘ஆக்ஸிஜன் மனிதன்’

தனது ரூ.22 லட்சம் பெறுமான ஆடம்பர காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை: நெகிழ வைத்த மும்பை ‘ஆக்ஸிஜன் மனிதன்’

ஆக்ஸிஜன் மேன்.

மும்பையில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்த, ‘ஆக்ஸிஜன் மனிதன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாநவாஸ் ஷேக் தனது ரூ22 லட்சம் பெறுமான எஸ்.யு.வி. ஆடம்பரக் காரை விற்று ஆக்ஸிஜன்களை வாங்கி கோவிட் நோயாளிகள் அழைப்புக்கு உதவி வருகிறார்.

  • Share this:
    நாட்டில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்க நுரையீரல் பாதிப்பினால் ஆக்ஸிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க மக்கள் பெரும் உயிர் பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் பிராணவாயு வசதியில்லாமல் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில்தான் மும்பையில் வசிக்கும் நல்ல உள்ளம் படைத்த, ‘ஆக்ஸிஜன் மனிதன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாநவாஸ் ஷேக் தனது ரூ22 லட்சம் பெறுமான எஸ்.யு.வி. ஆடம்பரக் காரை விற்று ஆக்ஸிஜன்களை வாங்கி கோவிட் நோயாளிகள் அழைப்புக்கு உதவி வருகிறார்.

    இவரது குழுவினர் கட்டுப்பாட்டு அறை ஒன்றையே நிர்மாணித்து தொலைபேசி அழைப்புக்கு ஏற்றவாறு பிராணவாயு சிலிண்டர்களை சப்ளை செய்து உதவி வருகிறார்.

    தனது ஃபோர்டு எண்டவர் காரை விற்று ஷாநவாஸ் 160 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார். இதனை தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

    கடந்த ஆண்டும் ஏழை மக்களுக்கு உதவியதால் தன்னிடம் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இதனால் தன் காரை விற்று சேவை செய்ய முடிவெடுத்ததாகவும் ஷாநவாஸ் கூறுகிறார்.

    ஊடகம் ஒன்றில் பேசிய ஷாநவாஸ், தன் நண்பரின் மனைவி ஆக்ஸிஜன் இல்லாமல் ஆட்டோவிலேயே மரணமடைந்தது தன்னை புரட்டிப் போட்டு விட்டது என்றார். மக்களுக்கு குறித்த நேரத்தில் உதவ ஹெல்ப்லைன் எண்களையும் உருவாக்கியுள்ளார் ஷாநவாஸ்.

    கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு இல்லை என்று கூறும் ஷாநவாஸ் ஜனவரியில் மட்டும் தனக்கு 50 அழைப்புகள் ஆக்சிஜன் கோரி வந்ததாகவும் தற்போது 500-600 அழைப்புகள் ஆக்ஸிஜன் கோரி தனக்கு வருவதாக தெரிவிக்கிறார்.

    இவரது டீம் 4000த்துக்கும் அதிகமானோருக்கு உதவி புரிந்துள்ளனர். மேலும் நோயாளிகளிடத்தில் சிலிண்டரை எப்படி பயன்படுத்துவது என்பதையும் இவரது குழுவினர் விளக்குகின்றனர். பயன்பாட்டுக்குப் பிறகு மக்கள் காலி சிலிண்டர்களை ஷாநவாஸின் கட்டுப்பாட்டு அறைக்கு திருப்பி கொடுத்து விடுகின்றனர்.

    அரசாங்கம் கைவிரிக்கும் சூழ்நிலையில் நல்ல உள்ளம் படைத்த ஷாநவாஸ் போன்ற கருணை கொண்ட மனிதர்களால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு நம்பிக்கையூட்டும், நெருக்கடி காலத்தில் நம்பிக்கையூட்டும் மனிதார்த்த உணர்வுக்கு ஒரு சல்யூட்!

    மகாராஷ்டிரா இன்னமும் கொரோனா பாதிப்பு, மரண விகிதங்களில் முதலிடம் வகிக்கிறது. நேற்று நாசிக்கில் மருத்துவமனை ஆக்ஸிஜன் தொட்டியிலிருந்து ஆக்சிஜன் கசிந்ததில் 22க்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகினர்.
    Published by:Muthukumar
    First published: