டெல்டா வைரஸுக்கு எதிராக மூன்றாவது தவணை தடுப்பூசி

தடுப்பூசி

கொரோனா தொற்றுக்கு ஆளான பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அதிக அளவில் ஆண்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 • Share this:
  டெல்டா வைரஸுக்கு எதிராக குறைவான அளவிலேயே ஆண்டிபாடிகளை தடுப்பூசி உருவாக்குவது தெரியவந்துள்ளது. எனவே, மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது குறித்து சிந்திக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அதேநேரம், வைரஸ் பல்வேறு வகையிலும் உருமாற்றம் பெற்று வருகிறது. டெல்டா வகை வைரஸை தடுப்பதில் கோவிஷீல்டு தடுப்பூசியின் திறன் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது.

  இதில், கோவிஷீல்டு தடுப்பூசியை ஒன்று அல்லது இரண்டு தவணை போட்டுக் கொண்டவர்கள், கொரோனாவிலிருந்து குணமடைந்த ஒன்று அல்லது  இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும்  இரண்டு தவணை தடுப்பூசி போட்ட பின் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் என ஐந்து வகையானவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

  இதில், தடுப்பூசி போட்டுக் கொண்ட 4 வாரங்களுக்குப் பிறகே மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில், முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஏற்கனவே இருந்த வைரஸ் மாதிரிகளை விட, டெல்டா வகை வைரஸை எதிர்கொள்வதில் 4.5 மடங்கு குறைவான திறன் இருப்பது தெரியவந்தது. இரண்டு தவணை போட்டுக் கொண்டவர்களுக்கு 3.2 மடங்கு குறைவான ஆண்டிபாடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

  அதேநேரம், கொரோனா தொற்றுக்கு ஆளான பின்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, அதிக அளவில் ஆண்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம், கொரோனா தொற்றானது முதலாவது தவணை தடுப்பூசிபோன்று செயல்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  உடல்ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு அதிக ஆண்டிபாடிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு மட்டுமே குறைவான ஆண்டிபாடிகள் உருவாகியுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

  எனவே, டெல்டா உள்ளிட்ட வகை வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போடுவது குறித்து முடிவுசெய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து விரைவில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: