தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்...

கொரோனா தடுப்பூசி!

தமிழகத்தில் இன்று தடுப்பூசி திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது.  தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது தினசரி 1,25,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

    இதில் 3797 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும், 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1,25,000 பேர் மட்டுமே போட்டுக் கொள்கின்றனர். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கென பிரத்யேக மையங்கள் திறக்கப்படவில்லை. ஜனவரி 16 ஆம் தேதி 600 மையங்களில் தொடங்கப்பட்ட இத்தடுப்பூசி போடும் பணி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 4,328 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.

    தற்போது வரை 6,83,419 சுகாதாரப்பணியாளர்கள், 6,67,296 முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 13,27,811 பேர், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 12,65,479 பேர் என மொத்தம் 39,44,005 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். அதிக நபர்களுடன் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த, சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

    மேலும் படிக்க... கொரோனா 2வது அலை : மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை

    கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: