கொரோனா மரணங்களையும் எரியும் பிணங்களையும் ஊடகங்களில் காட்டினால் என்ன தவறு? உண்மைதானே: மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கே ஜா கருத்து

டாக்டர் ஆஷிஷ் ஜா.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ளது மரணங்களும், எரியும் பிணங்களின் காட்சிகளும் பெரிய அளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இவையெல்லாம் அயல்நாடுகளில் இந்தியாவின் நல்மதிப்பை குறைக்கும் செயல் என்று சிலர் இதைக் கண்டிக்கின்றனர், ஆனால் உண்மை நிலவரத்தை காட்டுவதில் தவறில்லை என்று பிரவுன் பல்கலைக் கழகத்தின் டீன் ஆஷிஷ் கே ஜா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கே ஜா இந்திய வம்சாவளி அமெரிக்கர், பிரவுன் பல்கலைக் கழகத்தின் டீன் ஆக உள்ளார், இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்க நிபுணர்கள் குழுவில் இடம்பெற்று இந்தியாவின் முக்கியத் தலைவர்கள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரையில்லாத வகையில்  3.60 லட்சம் பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 97 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

  தற்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29 லட்சத்து 78 ஆயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தத் தொற்றில் 16.55 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து ஒரு கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 371 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 82.33 ஆகக் குறைந்துள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2 லட்சத்து ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

  டெல்லியில் 381 பேரும், சத்தீஸ்கரில் 246 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 264 பேரும், குஜராத்தில் 170 பேரும், கர்நாடகாவில் 180 பேரும், ஜார்க்கண்டில் 131 பேரும், ராஜஸ்தானில் 121 பேரும், பஞ்சாப்பில் 100 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  இந்நிலையில் ஊடகங்களில் எரியூட்டு தகன மேடைகள், வரிசையாக எரிப்பதற்கோ, புதைப்பதற்கோ இடுகாடுகளின் வாசலில் காத்திருக்கும் பிணங்களின் வரிசைகள்,அருகருகே எரிக்கப்படும் எக்கச்சக்கப் பிணங்கள், மருத்துவமனையில் இறப்பவர்கள் கணக்கு மட்டுமே அரசு கணக்கில் வருவதாகவும் மருத்துவமனைகளி இடமின்றி வீடுகளில் மரணிக்கும் கொரோனா நோயாளிகள் கணக்கில் வருவதில்லை எனவும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் எரியும் பிணங்களையும் வரிசைகட்டி நிற்கும் உடல்களையும் காட்டி வெளிநாடுகளில் இந்தியாவின் நிலையை தவறாகக் காட்டலாமா என்று ஒருசில தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  இது தொடர்பாக பிரவுன் பல்கலைக் கழக பொதுச்சுகாதார பிரிவு நிபுணர் ஆஷிஷ் கே ஜா ஆங்கில ஊடகம் ஒன்றிற்குக் கூறும்போது, “இந்தியாவில் நிறைய திறன் இருக்கிறது, உலக வாக்சின் தயாரிப்பில் இந்தியா உற்பத்தி தலைநகரமாகத் திகழ முடியும் என்று நான் பேசி வருகிறேன். ஆனால் இதே சமயத்தில் இந்த பிணங்கள் எரியூட்டுவதைக் காட்டுவது, பிணங்கள் தகன மேடைக்கு அருகே வரிசையாக காத்திருப்பது என்பதும் இந்தியாவின் இன்றைய எதார்த்த நிலையே.

  இதை நியாயமற்றது என்றோ, இந்தியாவின் பலவீனங்களை அம்பலப்படுத்துவது என்றோ நான் பார்க்கவில்லை. மாறாக இந்தியாவில் எல்லாமே சரியாகப்போய்க் கொண்டிருக்கிறது தவறுகளே நடப்பதில்லை என்று காட்டுவதுதான் தவறு. அது நமக்கு உதவவும் உதவாது, அதில் உண்மையும் இல்லை அல்லவா?

  உலக ஊடகங்கள் நல்ல காரியம்தான் செய்து வருகின்றன. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட இடங்களில் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்ட போதும் இதே போன்றுதான் அவை செயல்பட்டன. மீடியா இதைச் செய்யும். ஆனால் பரந்துபட்ட சித்திரம் என்னவென்பதையும் காட்ட வேண்டும். இந்தியாவிடம் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளது நாம் அனைத்தையும் தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: