மத்திய அரசு வழிகாட்டுதல் படி அறிகுறி உள்ள காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இணை நோய்கள் பாதிப்பு உள்ளவர்கள் அதிக மரணம் அடைகின்றனர்.
எனவே சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், காசநோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
இதன்படி அறிகுறி உள்ள காசநோயாளிகள், சிகிச்சையில் உள்ள காசநோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக 2 வாரங்களுக்கு மேல் இருமல், 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டயாம் சோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்பிறகு காசநோய்- கொரோனா ஆகிய இரு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்டறிந்து கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் காசநோய் சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Also read... மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நீட்டிக்க தமிழக அரசு மனு - நாளைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் இதன்படி தமிழகத்தில் அறிகுறி உள்ள காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது வரை 52,489 காச நோயாளிகளுக்கு சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கண்காணிப்பின் மூலம் தொலைபேசி மூலம் பல்வேறு சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டுவருகிறது. வீடுகளுக்கு மருந்து கொண்டு செல்லும் களப்பணியாளர்கள் காசநோயை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா கேட்பார்கள். இதனைத் தொடர்ந்து நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்றே சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.