CoronaVirus : சென்னையில் கொரோனா உறுதிப்படுத்தப்படும் விகிதம் 5 சதவீதமாக குறைந்தது

கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனா உறுதிபடுத்தும் விகிதம் 5.3 சதவீதமாக குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

  • Share this:
சென்னையில் இரண்டு மாதங்களுக்கு பின் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல், கொரோனா உறுதிப்படுத்தப்படும் விகிதம் 5 சதவீதமாக குறைந்துள்ளது.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் சென்னையில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது. சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30,000 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில், தொற்று உறுதிபடுத்துவது 5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது பரிசோதிக்கப்படும் மாதிரிகளில் கொரோனா உறுதிப்படுத்தப்படும் விகிதம் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் 22.05 சதவீதமாக இருந்தது.

பின்னர் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் 15.03 சதவீதமாக குறைந்து. இந்நிலையில், சென்னையில் நேற்று 28,531 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 1,530 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதிபடுத்தும் விகிதம் என்பது 5.3 சதவீதமாக குறைந்துள்ளது சென்னை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

அதேபோல், சென்னையில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. சென்னையில் இரண்டு மாதங்களுக்கு பின் கிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் சிகிச்சையில் இருபோரின் எண்ணிக்கை 19,184 ஆக குறைந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 14ம் தேதி சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. அதன்பின் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.

மே 22ம் தேதி சென்னையில் அதிகபட்சமாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 49,236 ஆக அதிகரித்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கை வசதி இல்லாத நிலையில் ஏற்பட்டது. பின்னர், இந்த எண்ணிக்கை குறையத்தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கு பின் சென்னையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

அதேபோல், ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 44 சதவீதமாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 85 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

Must Read : தமிழகத்தில் தடுப்பூசி இல்லை என்பது உண்மை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், வீடு வீடாக சென்று பரிசோதனை உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இருப்பினும் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்குமென மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Published by:Suresh V
First published: