Vaccination : ஒருவருக்கு  இரு வேறு தடுப்பூசி போடுவது ஆபத்தா?  மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி

ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசிகளை, மாற்றி போடுவது ஆபத்தானது அல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  • Share this:
    நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கோவிஷீல்ட், கோவேக்சின், ஸ்புட்னிக்-வி என மூன்று வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

    இவற்றில் ஏதேனும் ஒரு தடுப்பூசியை இரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், உத்தர பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பாத்னி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவுதாகி கலன் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் இரு வேறு நிறுவனங்களின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 20 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  கடந்த 14ம் தேதி இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றபோது அவர்களுக்கு தவறுதலாக கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மருத்துவ பணியாளர்களின் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துவிட்டதாக சித்தார்த் நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

    அதேநேரம் 20 பேரும் எந்த பக்க விளைவுகளும் இன்றி ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஆனாலும் இதனால் ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்படுமா என தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய கொரோனா தடுப்புப் பணி ஆலோசகரான மருத்துவர் வி.கே.பால், ஒருவருக்கு இரு வேறு தடுப்பூசிகளை போடக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை மாற்றி போட்டாலும் கூட அதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இரு வேறு தடுப்பூசிகளை சோதனை முறையில் செலுத்தி ஆய்வு செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    Must Read : கொரோனா பாதிப்பில் சென்னையை மீண்டும் கடந்த கோவை.. பலி எண்ணிக்கை குறையாததால் அதிர்ச்சி!

     

    கோரோனாவுக்கான தடுப்பூசி என்றாலும் கோவிஷீல்டும், கோவேக்சினும் வேறு பட்ட அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: