தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் அருகே உள்ள சமூத் சகோன் மாகாணத்தில் மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள் விற்கப்படும் மிகப்பெரிய இடமாக மாகாசாய் சந்தை செயல்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் மூடப்பட்ட இந்தச் சந்தை, தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தச் சந்தையின் மூலம் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், அந்த மாகாணத்தையே தனிமைப்படுத்த தாய்லாந்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு சமூத் சகோன் மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மீன் சந்தையில் இறால் விற்பனை செய்த 67 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
Also read: பின்புறம் கார் கேபின் கொண்ட மாட்டுவண்டி.. Tesla-வால் இதனை ஈடுசெய்ய முடியுமா? - ஆனந்த் மஹிந்திரா சேலன்ஜ்..
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து பரிசோதனை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் என 689 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதை அறிந்து தலை கிறுகிறுத்துப் போயுள்ளனர். மூதாட்டியிடம் இருந்து வெறும் 4 நாட்களில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதால், இது தற்போது இங்கிலாந்தில் பரவியிருக்கும் புதுவகை கொரோனா வைரஸா என்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
689 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருக்கும் மூதாட்டி, வெளிநாடு செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ள தாய்லாந்து அரசு, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்றும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், சமூத் சகோன் மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்