தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பின்னர் கொரோனா 2-ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர் குழுவினர் எச்சரித்துள்ளனர். அரசும், மக்களும் இணைந்தே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற 3 மணிநேர ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை மக்கள் முறையாக கடைப்பிடிக்காத வரை தொற்றை கட்டுப்படுத்துவது கடினம் எனக் கூறிய மருத்துவர்கள், கொரோனாவின் முதல் அலையில் தான் தமிழகம் தற்போது சிக்கியிருப்பதாகக் கூறினர். , சீனாவைப் போல, தமிழகத்தில் 3 மாதத்துக்கு பிறகு கொரோனா 2வது அலை ஆரம்பிக்கலாம் எனவும் எச்சரித்தனர்.
மக்கள் பயப்படும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டவில்லை எனக் கூறிய மருத்துவர்கள், மக்களின் அச்சம், சந்தேகங்களை போக்கும் வகையில், நடமாடும் மருத்துவமனைகளை ஏற்பாடு செய்ய பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும்கூட மக்கள் அலட்சியம் காட்டக் கூடாது எனவும் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று தனிமைப்படுத்திவிடுவார்களோ என பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
உடல் நிலை சரியில்லாதவர்கள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உதவியுடன் உடம்பிலுள்ள ஆக்சிஜன் அளவை அவ்வப்போது கண்டறிந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திகொள்ள அனுமதிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளதாகவும், ஆக்சிஜன் அளவு குறைந்தால் மருத்துவமனையை அணுகுமாறும் கூறியுள்ளனர்.
சென்னையில் பகுதி வாரியாக தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் அளித்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.
Also See:
ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ
வழக்கறிஞராக மாறிய சில்லுனு ஒரு காதல் குழந்தை நட்சத்திரம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.