Home /News /coronavirus-latest-news /

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... அண்டை மாநிலங்களுடன் ஒரு ஒப்பீடு...!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... அண்டை மாநிலங்களுடன் ஒரு ஒப்பீடு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

கோயம்பேடு மூலமாக பரவிய தொற்றால் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் அதிகமாக பரிசோதனைகள் நடப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் அதிகாரிகள்

    அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது கொரோனாவால் தமிழகமே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற மாநிலங்களில் தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒற்றை அல்லது இரட்டை இலக்கங்களில் உயரும் நிலையில் தமிழகத்தில் மூன்று இலக்கங்களில் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் அடுத்த நிலையில் ஆந்திராவிலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழகத்தோடு ஒப்பிடும்போது 75 விழுக்காடு குறைவாகவே அங்கே பாதிப்பு இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தெலங்கானாவைத் தவிர கர்நாடகா, கேரளாவில் ஆயிரங்களுக்குள்தான் பாதிப்பு இருக்கிறது.

    குணமடைந்தவர்களைப் பொறுத்தவரையில் சதவிகிதத்தின் அடிப்படையில் கேரளாவே முன்னிலையில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 519 பேரில் 492 பேர் குணமடைந்துவிட்டனர். கடந்த சில நாட்களில் நூற்றுக் கணக்கில் புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் குணமடைந்தோர் சதவிகிதத்தில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கொரோனாவால் மரணமடைந்தவர்கள் தென்னிந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் சதவிகிதத்தை வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கிறது.

    கொரோனா பரிசோதனையைப் பொறுத்தவரையில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. இதுவரை சுமார் இரண்டரை லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகா, ஆந்திராவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இதன் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும் அம்மாநிலம் கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

    தமிழகத்தைப் பொறுத்தவரையில் கோயம்பேடு மூலமாக பரவிய தொற்றால் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும் அதிகமாக பரிசோதனைகள் நடப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்கிறார்கள் அதிகாரிகள். ஊரடங்கு தளர்த்தப்பட்டு பெரும்பாலான கடைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.

    கேரளாவில் கொரோனா ஏறக்குறைய கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் இருந்து ஊர் திரும்பும் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஒன்றே அம்மாநிலத்தின் புதிய சவாலாக இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் 6-ல் தொற்றாளர்கள் யாரும் இல்லை. அம்மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

    தெலங்கானாவில் மிகக் குறைந்த அளவில் பரிசோதனை செய்துள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய தொற்று உறுதியாகி வருவது பிரச்னையாக உள்ளது. ஆனாலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கடைகள், ஐ.டி. நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் 35 விழுக்காடு வாகனங்கள் சாலைகளுக்கு வந்துவிட்டன.

    ஆந்திராவில் அதிக பரிசோதனைகள் நடைபெற்றுள்ள போதும் குறைந்த அளவிலேயே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அம்மாநிலத்திற்கு நிம்மதியைத் தந்துள்ளது. அதன் காரணமாகவே பெரும்பாலான கடைகள் காலை முதல் இரவு வரை திறந்துவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.

    கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சிவப்பு மண்டல பகுதிகளில் கூட ஆடை தயாரிப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரு, மைசூரு பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலமாக இருக்கின்றன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கூட்டம் அதிகமாக கூடியதால் உணவகங்கள், பார்களில் மதுபாட்டில் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநிலம் வாரியாக கொரோனா பாதிப்பு (மே 11 வரை):

    தமிழகம் - 8,002

    ஆந்திரா - 2,018

    தெலங்கானா - 1,275

    கர்நாடகா - 862

    கேரளா - 519

    புதுச்சேரி - 17

    மாநிலம் - குணமடைந்தோர் - சிகிச்சை பெறுவோர் - குணமடைந்தோர் சதவிகிதம்

    தமிழகம் 2,051 - 5,865 - 26%

    ஆந்திரா 998- 975 - 49%

    தெலங்கானா 801- 444 - 62%

    கர்நாடகா 426- 404- 49%

    கேரளா 489- 27 - 94%

    புதுச்சேரி 9- 8 - 52%

    மாநிலம் - உயிரிழந்தோர் பாதிக்கப்பட்டோரில் இறப்பு:

    தமிழகம் - 53 - 0.66%

    ஆந்திரா - 45 - 2.22%

    தெலங்கானா -30 - 2.35%

    கர்நாடகா -31 - 3.59%

    கேரளா - 3 - 0.57%

    புதுச்சேரி -0 -0%

    பரிசோதனை எண்ணிக்கைகள்:

    தமிழ்நாடு -2,54,899 மாதிரிகள்

    ஆந்திரா -1,73,735 மாதிரிகள்

    தெலங்கானா- 19,278 மாதிரிகள் (ஏப். 30 வரை)

    கர்நாடகா- 1,11,595 மாதிரிகள்

    கேரளா -37,858 மாதிரிகள்

    புதுச்சேரி -4,486 மாதிரிகள்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி