ஜனவரி 16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை தொடக்கம் முதலே குறைவாக இருந்து வருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு தடுப்பூசிகள் குறித்தும் பல கேள்விகள் சந்தேகங்கள் அச்சங்கள் இருப்பதன் காரணமாக முன்கள பணியாளர்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தயக்கம் நிலவுவதை காணமுடிகிறது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 2.47 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். இதில் 2.1 லட்சம் பேர் சுகாதாரப் பணியாளர்கள் ஆவர். முன் களப்பணியாளர்கள் 22,756 பேர். காவல்துறையினர் 9,512 பேர் ஆவர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 28 நாட்கள் கழித்து செலுத்த வேண்டுமென்ற அறிவுறுத்தலின்படி தடுப்பூசி முகாம்கள் மாநிலத்தில் செயல்பட தொடங்கியுள்ளன. ஜனவரி 16 ஆம் தேதியான முதல் நாளில் 3,027 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியையும் 99 பேர் கோவாக்ஸின் தடுப்பு மருந்தையும் என 3,126 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அவர்கள் கடந்த 13-ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இவர்களில் 36.9 சதவீதம் அதாவது 1,154 சுகாதார பணியாளர்கள் மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து இன்று முதல் நடைபெறும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் காட்சி Image: Talukdar David / Shutterstock.com
இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 12 வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக எடுத்துக்கொண்டால் அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்று பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் காத்திருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள நினைக்கலாம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் பொது மருத்துவர்கள் பிரிவின் தேசிய இணைச் செயலாளர் மருத்துவர் ரேகா குறிப்பிடுகிறார். மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்ட பலருக்கு சுமார் 24 மணி நேரம் கை வலி இருந்ததால் அதற்காக பயந்து இரண்டாவது தவணையை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
மேலை நாடுகளில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததன் காரணமாக தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்க இதுபோன்ற காரணங்களை அந்த நாடுகள் குறிப்பிடலாம். இந்தியாவில் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்பதுதான் அரசின் அறிவுறுத்தல் ஆகும். இது பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வழங்கப்பட்டிருக்க கூடிய அறிவுறுத்தல்கள். எனவே இதனை பின்பற்றுவதே நமக்கு பலன் அளிக்கும் என்று மாநில சுகாதாரத்துறை செயலர் செயலர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
தடுப்பூசி போடுவது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதது தடுப்பூசி தயக்கத்திற்கு மிக முக்கிய காரணம் என்று தொற்று நோய் மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமி நாதன் தெரிவிக்கிறார். தடுப்பூசி போடுவதால் என்ன சிரமங்கள் ஏற்படும் என்று சுகாதாரப் பணியாளர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவது அவசியமாகும். சுகாதாரப் பணியாளர்களுக்கு இது ஏற்கனவே தெரியும். அவர்கள் இந்த நோயின் மோசமான விளைவுகளை நேரடியாக பார்த்திருந்ததால் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமாக முன்வருவார்கள் என்று கருதியது தவறாகும். நோய் பாதிப்பு குறைந்திருப்பதால் பலர் தடுப்பூசி அவசியமில்லை என்று கருதுகின்றனர் என்றும் தெரிவிக்கிறார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவரவர் முறை வரும்போது அதனை எடுத்துக் கொள்வதே சிறந்த முடிவாகும் என்கிறார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்