தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்போர் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த உத்தரவு

மாதிரி படம்

நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக்கவனம் செலுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என உத்தரவு

 • Share this:
  தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு பொது சுகாதார சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்ற பொது இடங்களில் மக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், கலாச்சார, வழிபாடு மற்றும் பிற கூட்டங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து, அதனை சம்பந்தப்பட்ட துறையினர் உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

  கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து மாதிரிகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தகுதிவாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பதுடன், நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்புக்கவனம் செலுத்தி விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கடந்த ஆண்டைப் போலவே கண்காணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க... மார்ச் 15 முதல் 21 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில் அமல்படுத்தப்படுகிறது? முழு விபரம் இங்கே..

  கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுவதுமாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், 9 முதல் 12-ம் வகுப்புகள் நடைபெற்றுவரும் நிலையில், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.  வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், அறிகுறி இருந்தால், மாணவர்களை வீட்டிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: