CHENGALPATTU DISTRICT TAMIL NADU CORONA VIRUS HEALTH SECRETARY RADHAKRISHNAN EXPLAINS LOCKDOWN MSB
கொரோனா பாதிப்பு அதிகரித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அத்தியாவசம் இல்லாத பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க ஆலோசனை செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக சென்னை, கோயம்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளது. நேற்று மத்திய அரசு சார்பாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக வெளியிட்ட 46 மாவட்டங்களில் தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்கள் பெயர்கள் இடம்பெற்றுளன. தற்போது வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டுமே ஒரே நாளில் 2% மேலாக பொதுமக்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன. பொதுமக்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரே மருத்துவமனைக்கு செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளை கண்காணிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இப்படி இருந்தால் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளதால் நோய் கட்டுப்பாடு பணிகளை தீவிரப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் குடிசைப் பகுதியில் கொரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் 51% கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 42% கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் என கூறினார்.
அதேபோன்று 45 வயதிற்கு மேல் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்களில் உள்ள இறப்பு சதவீதம் 90ஆக உள்ளதாகவும் 18 வயது முதல் 45 வயது வரை கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் ஏற்படும் இறப்பு சதவீதம் 9 ஆக உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா நோய்க்கு எந்த மருந்தும் இல்லாமல் இருந்ததாலும், மருத்துவ வசதிகளை அதிகப்படுத்த மட்டுமே ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தற்போது உள்ள சூழலில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தால் படிப்படியாக அதியாவசம் இல்லாத பணிகளுக்கு, unlock 4, unlock 5-ல் என்ன கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமா என ஆலோசனை செய்யப்படும். தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்” இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.