கொரோனாவில் லேசான தொற்றுக்கும், கடும் பாதிப்புக்கும் உள்ள அறிகுறிகள்

கொரோனா வைரஸ்

கொரோனாவில் லேசான தொற்றுக்கும், கடும் பாதிப்புக்கும் உள்ள அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.

 • Share this:
  கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதில் பலருக்கு லேசான தொற்று அறிகுறிகளும், பலருக்கு நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. ஆனால் 80 சதவீத கொரோனா தொற்றாளர்களுக்கு லேசான பாதிப்புக்கு உண்டான அறிகுறிகளே தெரிவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  அந்தவகையில், வறட்டு இருமல், தொண்டைப் புண், சளி ஆகியவை லேசான பாதிப்புக்கான முதன்மை அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

  இரண்டாவதாக குறைந்த அளவிலான காய்ச்சல் மற்றும் குளிர், கடும் சோர்வு, வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவையும் கருதப்படுகின்றன.

  உடல்வலி, உடற்சோர்வு மற்றும் தலைவலியும் லேசான கொரோனா பாதிப்பின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியும் கொரோனா அறிகுறிகளாக கருதப்படுகின்றன,

  இவை தவிர காதிரைச்சல், விழிப்படலங்களில் ஏற்படும் இளஞ்சிவப்பு நிறம் மற்றும் வாய்ப்பகுதிகள் உலர்ந்து போவதும் இதர அறிகுறிகளாகும் இதில் ஐந்து அறிகுறிகளுக்கு குறைவாக ஒருவரிடம் காணப்பட்டால் அவர்களுக்கு லேசான தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  அதேவேளையில் கொரோனா தொற்று கடும் பாதிப்பின் அறிகுறிகளாக தொடர் காய்ச்சல் கருதப்படுகிறது மேலும் நிலையற்ற ஆக்ஸிஜன் அளவுகளும், நெஞ்சு வலியும் கடும் பாதிப்பின் அறிகுறிகளாகும். தோல் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத்திணறல் ஆகியவையும், அஜீரணம், நாள்பட்ட குடல் வலி போன்றவையும் கொரோனா கடும் பாதிப்பின் அறிகுறிகள் என நிபுணர்கள் கூறுகின்றனர்

  முக்கிய உறுப்புகள் செயல்படுவதில் பாதிப்பு, குழப்பம், சுயநினைவற்ற உளறல் ஆகியவையும் கடும் பாதிப்பின் அறிகுறிகளே. பக்கவாத அபாயம் மற்றும் ரத்த உறைவு அபாயங்களும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

  இவற்றை தவிர குறிப்பிட்ட கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை உதவியை நாடவேண்டும் எனவும் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

  அதன்படி உதடுகளில் நிறமாற்றம், வெளிறிய தோல், ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைதல் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகபட்ச காய்ச்சல் நிலவுவதும், நிமோனியா எனப்படும் நுரையீரல் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தாலும் மருத்துவமனையை அணுக வேண்டும்

  இதயத்துடிப்பில் மாற்றம், குடல் செயல்பாடுகளில் மாற்றம் மற்றும் பசியின்மை ஏற்பட்டாலும் மருத்துவமனை செல்ல நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: