ஜூன் 30-க்குப் பிறகு நாடு முழுவதும் ஊரடங்கா? தளர்வா?

கோப்புப்படம்

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. அதனால், மாநில அரசுகள் ஊரடங்குகளை நீட்டிப்பதா அல்லது தளர்வு என்பதில் குழப்பநிலையிலேயே இருந்துவருகின்றன.

  ஜூன் 30-ம் தேதியுடன் தற்போதைய ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுடைய மாநிலச் சூழலுக்கு ஏற்றாப்போல முடிவுகளை எடுத்துவருகின்றன. முக்கியமாக ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

  ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், என்னென்ன துறைகள் செயல்படலாம், எதற்கெல்லாம் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது என்று இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

  அசாம்: அசாம் மாநிலம் முழுவதும் வெள்ளிகிழமை முதல் இரவு 12 மணி நேரம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காம்ருப், கவுகாத்தி ஆகிய மாவட்டங்களில் ஜூன் 28-ம் தேதியிலிருந்து 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் ஜூலை 31-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். கொல்கத்தாவுக்கு வரும் சர்வதேச விமானங்களையும், உள்நாட்டு விமானங்களையும் நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். ஜூலை 1-ம் தேதி முதல் கொல்கத்தாவில் மெட்ரோ சேவை தொடங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

  டெல்லி: கொரோனா பாதிப்பின் காரணமாக ஜூலை 31-ம் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. அங்கே, ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்துநடைபெறுகின்றன.

  தமிழ்நாடு: சென்னை, மதுரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தேனி ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

  கர்நாடகா: கர்நாடகாவில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்படாது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். வர்த்தக நடவடிக்கைகளைத் தொடரும்போது கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும், கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் சேர்த்து கையாள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: