மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினருக்கான ஊதியம் சேவைக்கு ஈடானதாக இல்லை - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

சென்னை உயர்நீதிமன்றம்

"கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி பரிசோதனை நடத்த வேண்டும்"

 • Share this:
  நாள் தோறும் சுகாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சேவையாற்றும் அரசு மருத்துவர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், காவல் துறையினருக்குமான ஊதியம், அவர்களின் சேவைக்கு ஈடானதாக இல்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய - மாநில அரசுகள் ஊதிய உயர்வு வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

  கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும், கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார்.

  இந்த வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசிடம், 37 ஆயிரத்து 648 முழு உடல் கவசங்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் N-95 முக கவசங்களும், 7 லட்சத்து 75 ஆயிரத்து 106 மூன்று மடிப்பு முக கவசங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

  மேலும், 14 ஆயிரம் பரிசோதனை கருவிகள் தற்போது இருப்பில் இருப்பதாகவும், உணவின்றி எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தன்னார்வலர்களையும் அனுமதிப்பதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு அடிக்கடி பரிசோதனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

  மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவுக்கு எதிராக நாள் முழுதும் போராடும் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம், அவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்களின் சேவையை பாராட்டி, மத்திய - மாநில அரசுகள் அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

   
  Published by:Sankaravadivoo G
  First published: