தமிழகத்தில் நாளை ரெம்டெசிவர் விற்பனை நடைபெறாது - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்!

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 18-ம் தேதி முதல் இணையத்தில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்திற்காக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் நாளை தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை நடைபெறாது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் 100 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகளில் 33 ஆக்சிஜன் வசதி கொண்டவை. அடுத்த 2 நாட்களில் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றப்படும்.

  வி்ருகம்பாக்கத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ள 100 படுக்கைகளில் 40க்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து படுக்கைகளும் ஆக்சிஜன் படுக்கையாக மாற்றப்படும். பெரிய மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவே கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. நந்தனம் வர்த்தக மையத்தில் 104 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் செயல்பாட்டு வருகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அடுத்த 3 முதல் 4 நாட்களில் தீர்வுக்கு வரும்.

  அடுத்த 2 முதல் 3 நாட்களில் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும். கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான் என்றும் 5 கோடி பேருக்கு அடுத்த 3 மாதத்தில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  தமிழகத்தில் 18-ம் தேதி முதல் இணையத்தில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்திற்காக விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை சுகாதாரத்துறையினர் உறுதிசெய்து உண்மையில் அந்த மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் தேவை இருப்பின் மருத்துவமனை பிரதிநிதிகளை வர வைத்து நேரில் வழங்குவர். இந்த செயல்முறைக்காக நாளை தமிழகத்தின் 6 மாவட்டங்களிலும் ரெம்டெசிவிர் விற்பனை நடைபெறாது என்று அவர் கூறினார்.

  இதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 450-470 டன் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று 80 டன் ஆக்சிஜன் கலிங்கா நகரில் இருந்து வந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. நோயாளிகளில் வீட்டிலேயே தன்னிச்சையாக ஆக்சிஜனை பயன்படுத்த கூடாது. மருத்துவர் முன்னிலையில் மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிஜன் எடுத்துக் கொள்ள வேண்டும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

  பின்னர், பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் 1 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. பயமின்றி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். உயிர் சேதத்தை தவிர்க்க தடுப்பூசி உதவும். வீடுகளில் பரிசோதிக்கப்படும் நபர்கள் தேவைப்பட்டால் உடனடியாக முகாம்களுக்கு அழைத்துவரப்படுவர். கொரோனா பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: