இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கட்டுங்கடங்காத வகையில் அதிகரித்துவருகிறது. இதுவரையில், உலகம் கண்டிராத வகையில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.50 லட்சத்தைக் கடந்துள்ளது. அதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள்
கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றனர். இந்தநிலையில், மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கு ரிலையன்ஸ் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஃபௌன்டேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 875 படுக்கைகளை உருவாக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. மற்ற எந்த தொண்டுநிறுவனங்களும் செய்திராத அளவுக்கு அதிக பங்களிப்பை ரிலையன்ஸ் நிறுவனம் செய்கிறது. மும்பையின் ஓர்ளி பகுதியிலுள்ள தேசிய விளையாட்டு சங்கத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் சார்பாக
கொரோனா நோயாளிக்காக 650 படுக்கைகளை உருவாக்கி அதனைப் பார்த்துக்கொள்ளும் பணியை மேற்கொள்ளவுள்ளது.
100 புதிய ஐ.சி.யூ படுக்கைகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை உருவாக்கவுள்ளது. அறிகுறியற்ற நோயாளிகளுக்காக டிரெய்டென்ட் ஹோட்டலில் 100 படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. செவன் ஹில்ஸ் மருத்துவமனையில், 125 படுக்கைகளில் 45 ஐ.சி.யூ படுக்கைகள் அதிகப்படுத்தப்படவுள்ளன. தேசிய விளையாட்டு சங்கம் மற்றும் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் கட்டணமில்லாமல் சிகிச்சையளிக்கப்படும். கடந்த ஆண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை மாநகராட்சி இணைந்து கொரோனாவுக்கென்று 225 படுக்கை வசதியுடன் செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அதில், 20 ஐ.சி.யூ படுக்கைகளுடன் கூடிய 100 படுக்கைகளை ரிலையன்ஸ் நிறுவனம் பார்த்துக்கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.