ரெம்டெசிவிர் மருந்தை பெற 20 மணிநேரம் காத்திருக்கும் அவலம்: மாவட்ட அளவில் விற்பனையை தொடங்க ராமதாஸ் கோரிக்கை

ரெம்டெசிவிர்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை பெற நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் நிலவுவதால், மாவட்ட அளவிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனம் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்

 • Share this:
  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை பெற நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் நிலவுவதால், மாவட்ட அளவிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை அரசு தொடங்க வேண்டும் என பாமக நிறுவனம் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

  கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழக அரசு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வருகிறது.

  எனினும், இதனை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசே அந்த மருந்தை நேரடியாக விற்பனை செய்யவதற்கும் 18 வயது நிறைவடைந்தோருக்கு தடையின்றி தடுப்பூசி போடுவதற்காக ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்ய தீர்மானித்திருக்கும் அரசின்  நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  அனைத்து மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மருந்தின் விலை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து ரூ.5400 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.899 முதல் ரூ.3490 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், எனினும், பதுக்கல் காரணமாக ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

  மேலும், “ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோருக்கு வழங்கும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் 6 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து ரூ.9,400 என்ற விலையில் விற்கப்படுகிறது.

  கொரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் இந்த மருந்தை வாங்க 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ரெம்டெசிவிர் வாங்க பலர் முதல் நாள் இரவிலிருந்து விடிய, விடிய காத்திருப்பதை காண முடிகிறது.

  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மருந்தை வாங்கிச் செல்வதற்காக நாள் கணக்கில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவர்கள் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு வந்து வாங்கிச் செல்வதில் பல இடையூறுகள் உள்ளன” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  எனவே,  இத்தகைய  நேர விரயத்தை தவிர்க்க,  அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  மேலும் படிக்க.. அமேசான் பிரைமில் வெளியாகும் கர்ணன்?

  இதேபோல், மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ள நிலையில், அதிகளவிலான கூட்டத்தை சமாளிக்க ஏற்கனவே உள்ள தடுப்பூசி மையங்களுடன் மினி கிளினிக்குகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையங்களை அமைத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: