Tejasvi Surya | யார் அந்த 17 பேர்? இவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்?- கொரோனா முறைகேடுகளுக்கு மதச்சாயம் பூசிய பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு குவியும் கண்டனங்கள்

பாஜக எம்.பி, தேஜஸ்வி சூரியாவுக்கு குவியும் கண்டனங்கள்.

பெங்களூரு மாநகராட்சியின் மருத்துவமனை ஐசியு படுக்கை ஒதுக்கீடு கொள்கையில் நடந்த முறைகேடுகளை மதரீதியாக அணுகி ஒரு பிரிவினரை பலிகடா ஆக்குவதா என்று பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியா உட்பட பிற பாஜக எம்.பி.க்கள் மீதும், முதல்வர் எடியூரப்பா மீதும் அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

  • Share this:
    இது தொடர்பாக வைரலான வீடியோவில் கோவிட்-19 வார் ரூமில் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, பசவங்குடி எம்.எல்.ஏ. ரவி சுப்ரமண்யா, பொம்மனஹள்ளி எம்.எல்.ஏ சதீஷ் ரெட்டி, சிக்பெட் எம்.எல்.ஏ. உதய் கருடாச்சர் ஆகியோர் கோவிட்-19 அவசர நிலைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு அறையில் அதாவது வார் ரூமில் 205 பணியாளர்களிள் 17 முஸ்லிம் பணியாளர்கள் பெயரை உரக்கப் படித்து, ‘இவர்கள் யார்? இவர்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்று கூச்சல் போட்டது பதிவாகி கடும் கண்டனக்குரல்களை எழுப்பியுள்ளது.

    முதல் கண்டனக் குரலாக வரலாற்றறிஞரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குகா, “இந்த நான்கு கனவான்கள் யார்? கட்சியின் உயர்மட்டம் இட்ட உத்தரவின் படி செயல்பட்டார்களா? நாடு சந்தித்து வரும் இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலில் மதரீதியான பிரிவினைகளை ஏற்படுத்துவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், எனவே முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் ஹெச்டி தேவேகவுடா ஆகியோர் ஒற்றுமையுடன் எழுந்து நின்று இதனை கண்டிக்க வேண்டும்.

    முதல்வர் மற்றும் மூத்த தலைவர்கள் உடனடியாக இந்த விஷத்தை முறியடிக்கத் தலைப்பட வேண்டும்.

    நம் கவனம் முழுதும் கொரோனா பெருந்தொற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதில்தான் இருக்க வேண்டும். துயரத்தைக் கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்சிஜன் ஆகியவை போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமே தவிர பணியாளர்கள் இந்துவா, முஸ்லிமா என்று பார்த்துக் கொண்டிருப்பது மிக மோசமான ஒரு செயல். கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், நர்ஸ்கள், பிற ஊழியர்களை கவுரவத்துடனும் கருணையுடனும் நடத்த வேண்டும். ” என்று வேதனையுடன் கூறினார்.

    பொதுச்சுகாதார மருத்துவர் சில்வியா கற்பகம் கண்டிக்கும் போது, “தேஜஸ்வி சூரியா மற்றும் அவரது சகாக்கள் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சூழ்நிலையை மதரீதியாக ஒருதலைப்பட்சமாக அணுகுவது வெட்கக் கேடு” என்று சாடியுள்ளார்.

    இதற்கிடையே மருத்துவமனை ஐசியூ ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நாளொன்றுக்கு 50,000த்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்படுகின்றனர்.

    பெங்களூருவில் அதிகம் பாதிக்கப்படுவதால் மருத்துவமனைகளில் இடங்கள், படுக்கைகள் சிக்கலாகியுள்ளன. இந்நிலையில்தான் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூரியா தலையிட்டு இதை விசாரித்ததற்கு நன்றிகளும் அவருக்கு குவிந்து வந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வருகிறது.
    Published by:Muthukumar
    First published: