Rahul Gandhi | கொரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்ய வேண்டும்?- ராகுல் காந்தி அறிவுரை

ராகுல் காந்தி

கொரோனாவைக் கையாள்வதில் மத்திய அரசு கடும் தோல்வியடைந்துள்ளது, நிபுணர்கள் மார்ச் மாதமே எச்சரித்தும் அவர்கள் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று சாடிய ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்ய வேண்டும் என்ற தொனியில் பெரிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் வழக்கமாகி வருகின்றன, பலி எண்ணிக்கையும் 3800-3,900 என்று அதிகரித்து வருகிறது. நாடு முழுதும் மரண ஓலங்கள் நெஞ்சை உலுக்குவதாக சமூக ஊடகங்கள் அலறுகின்றன.

    இந்நிலையில் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    கொரோனா வைரஸ் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் உங்கள் அரசுக்கு தெளிவான பார்வை இல்லை. கொரோனாவை வென்றுவிட்டோம் என முன்கூட்டியே கொண்டாடத் தொடங்கி விட்டீர்கள், ஆனால், வைரஸ் அளவுக்கதிகமாக பரவி, இந்தியாவை ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

    இன்று கட்டுக்கடங்காமல் கொரோனா வளர்ந்து வருகிறது. தற்போது நம்முடைய அனைத்து அமைப்புகளையும் சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மத்திய அரசின் தோல்வியடைந்த நடவடிக்கையால், இந்த தேசம் 2-வது முறையாக தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்துவதைத் தவிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது.

    இன்னொரு முழு லாக்டவுனுக்கு மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். ஆகவே, ஏழை மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கிட வேண்டும்.

    கடந்த ஆண்டு லாக்டவுனில் ஏற்பட்ட பாதிப்பைப் போல் ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு கருணையுடன் மக்களிடம் நடக்க வேண்டும். குறிப்பாக விளிம்புநிலை மக்களுக்கும், ஏழைகளுக்கும் நிதியுதவியும், உணவும் வழங்க வேண்டும்.

    இந்த கொரோனா வைரஸ் சுனாமி தொடர்ந்து நாட்டை அழித்து வருகிறது. இதுவரை கண்டிராத இந்த சூழிலில் உங்களின் மிகமுக்கியமான முன்னுரிமை என்பது மக்களாகத்தான் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

    எங்கள் மக்கள் அனுபவிக்கும் தேவையற்ற துன்பங்களைத் தடுத்த நிறுத்த உங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன்.

    நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி, அனைத்து உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக அனைத்து தடுப்பூசிகளும் எவ்வாறு திறம்படச் செயல்படுகின்றன என்பதையும் ஆராய வேண்டும்

    நாடுமுழுவதும் கரோனா வைரஸ் எவ்வாறு உருமாறுகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும், அதன் மரபணு மாற்றம், வரிசை ஆகியவற்றையும், நோயை ஏற்படுத்தும் தன்மையையும்ஆராய வேண்டும்.

    அனைத்திலும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்து, உலகிற்கு நம்முடைய கண்டுபிடிப்புகள் தெரியப்படுத்த வேண்டும். லாக்டவுன் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கவலைப்படுவது தெரிகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் இந்த வைரஸை அனுமதிப்பதால் மனிதர்களுக்கு கொடுக்கும் விலை என்பது உங்களின் பொருளாதார ஆலோசகர்கள் அளிக்கும் பொருளாதார கணக்கீடுகளை விட மோசமானதாக இருக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published: