Home /News /coronavirus-latest-news /

Pulse Oximeter | பல்ஸ் ஆக்சி மீட்டர் விலை கிடு கிடு உயர்வு... தவிக்கும் மக்கள்...

Pulse Oximeter | பல்ஸ் ஆக்சி மீட்டர் விலை கிடு கிடு உயர்வு... தவிக்கும் மக்கள்...

Youtube Video

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இப்போது பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவியின் விற்பனை அளவுக்கு அதிகமாக அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்கவே விலையும் தாறுமாறாக எகிறியிருக்கிறது. பல்ஸ் ஆக்சி மீட்டர் பெயரில் கொள்ளை அரங்கேறுவது எப்படி?

    கொரோனா 2வது அலையில் பல்ஸ் ஆக்சி மீட்டருக்காக மக்கள் அலையத் தொடங்கியுள்ளனர். வாட்ஸ் ஆப் தொடங்கி பல வழிகளிலும் வரும் செய்திகளை நம்பி நம் மக்களும் அந்தக் கருவியை வாங்குவதால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் விண்ணை முட்டத் தொடங்கியிருக்கிறது. பல்ஸ் ஆக்சிமீட்டர் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?

    மனித உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அறிவதற்கு உதவும் கருவிதான் பல்ஸ் ஆக்சி மீட்டர். கையடக்க அளவே உள்ள இந்தக் கருவியை விரலில் மாட்டி, ஆக்சிஜன் அளவை அறிய முடியும். தற்போதைய கொரோனா 2வது அலை பாதிப்பில், 95 சதவீதத்திற்கு குறைவாக ஆக்சிஜன் அளவு இருந்தால்தான் அந்த நபர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வாட்ஸ் ஆப் தொடங்கி சமூக வலைதளங்கள் வழி்யாக ஆக்சி மீட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பல்ஸ்ஆக்சி மீட்டர் கருவிக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மருந்தகங்களில் முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக முன்பு 500 ரூபாய் தொடங்கி 1,000 ரூபாய் வரை விற்ற, வாரண்டி, கியாரண்டி இல்லாத சாதாரண ஆக்சிமீட்டர்கள், தற்போது 2,000 ரூபாய் தொடங்கி 3,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. கேட்டால், தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து விட்டதாக மருந்தகங்களில் தெரிவிக்கின்றனர்.

    இப்படி அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அவற்றுக்கு வாரண்டி, காரண்டி கிடையாது. மருந்தகங்களே அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. அதனால் பதுக்கலும் அதன் விளைவாக விலை உயர்வும் சங்கிலித் தொடராக நடக்கின்றன. குறைந்தபட்சம் 3,000 ரூபாய்க்கு மேல் உள்ள கருவியை வாங்கினால்தான் வாரண்டி, கியாரண்டி கிடைக்கிறது. சில இடங்களில் அதிக விலைக்கு விற்றதை தற்போது தள்ளுபடி விலையில் விற்பதாகவும் கூறுகின்றனர்.

    பல்ஸ் ஆக்சி மீட்டரை அதிகளவில் மக்கள் வாங்கத் தொடங்கியதுதான் விலை ஏற்றத்திற்கு காரணம். அதனால் மருந்து விற்பனை சங்கத்தினர் அதை குறைந்த விலையில் கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறை கூறாதீர்கள்: தமிழிசை செளந்திரராஜன்

    மேலும், பல்ஸ் ஆக்சி மீட்டர் வீட்டிற்கு வீடு தேவையில்லை; யாருக்கு அதிக பாதிப்பு இருக்கிறதோ அவர்கள் மருத்துவமனை அல்லது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதித்துக் கொண்டாலே போதுமானது.

    3

    பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி விற்பனையில் இன்னொரு சுவாரசியமான விஷயம்.. ஒவ்வொரு கருவியின் அட்டைப் பெட்டியிலும் எம்ஆர்பி விலை ஒன்றாக இருக்கும். விற்பனை விலை ஒன்றாக இருக்கும். பொதுவாக அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளின் விற்பனையிலும் என்ன நடக்கிறதோ அதுதான் பல்ஸ் ஆக்சி மீட்டர் விற்பனையிலும் நடக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி