அழுகி வீணாகும் கிர்ணி பழங்கள்: தோட்டத்தைப் பாதுகாக்க பழங்களைத் தூக்கி எறியும் விவசாயிகள்..!

அழுகி வீணாகும் கிர்ணி பழங்கள்

  • Share this:
புதுச்சேரியில் பயிரிடப்பட்ட கிர்ணி பழங்கள் ஊரடங்கு காரணமாக தோட்டத்திலேயே அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக வேதனையுடன் தெரிவித்தனர். 

புதுச்சேரி கிராமப்பகுதிகளில் கோடைக்காலத்து பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிடப்பட்டு வெளிமாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது  வழக்கம். இந்த பழங்கள் புதுச்சேரியிலும் பல இடங்களில் விற்பனையாகும்.

அதிகளவில் புதுச்சேரி கிராமப்பகுதிகளான புராணசிங்கு பாளையம், சேந்தநத்தம், பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க ஊரடங்கு காரணமாக இம்முறை வெளிமாநில வியாபாரிகள் யாரும் வர முடியவில்லை. விவசாயிகளாலும் விற்பனை செய்ய முடியவில்லை.

கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பிஎஸ் பாளையம் விவசாயி கூறுகையில், " கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன். இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தோட்டத்திலேயே பழங்கள் அழுகி வீணாவதை பார்க்க முடியவில்லை" என்று வேதனையாக கூறினார்.

இது குறித்து தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ. 25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ. 5-க்குதான் விற்பனையாகிறது. வயலை தற்போது சுத்தம் செய்ய தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது" என்றனர்.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவிட்டோம். தற்போது நிச்சயம் லாபம் கிடைக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்து விட்டது. மொத்தமும் நஷ்டம்தான். பல லட்சம் லாபமும் கிடைக்காமல், கடனையும் அடைக்க முடியாமல் அடுத்த முறை எப்படி விவசாயம் பார்ப்பது என தெரியவில்லை” என்று கதறுகின்றனர்.

Also see...சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published: