கோவாக்சின் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என நிரூபணம்.. தடுப்பூசியை போட்டுக்கொண்ட மருத்துவர்கள் தகவல்..

கோவாக்சின்

கோவாக்சின் தடுப்பூசிக்கான பரிசோதனை முழுமை பெறாத நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் மருத்துவர்கள் அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

  • Share this:
    கொரோனா வைரஸை தடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஆனால் இம்மருந்தின் செயல்பாடு குறித்த 3ம் கட்ட பரிசோதனை இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் இம்மருந்து பரிசோதனையில் இருப்பதை தாங்கள் அறிந்தே செலுத்திக் கொள்வதாக ஒப்புதல் ஏற்பு கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அந்த கடிதத்தில், கோவிட் தடுப்பு மருந்தான கோவாக்சின், அவசர கால அடிப்படையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது என்றும், கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பு மருந்து உருவாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தடுப்பு மருந்து 3ம் கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும்,  இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அவசியமில்லை என கருதக்கூடாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒருவேளை பாதகமான நிலை உருவானால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...முதல்நாளில் அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் 18,412 பேருக்கு தடுப்பூசி

    கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான ஒப்புதல் ஏற்பு கடிதத்தில் கையெழுத்திடாதவர்களுக்கு, அந்த தடுப்பூசி போடப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு அச்சம் தேவையில்லை என அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு தடுப்பூசியும் பாதுகாப்பானவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


    இதற்கிடையே, டெல்லி RML அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தேவையில்லை என தெரிவித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், சோதனை முழுமை பெறாத கோவாக்சின் தடுப்பூசியை போட வேண்டாம் என்றும், கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். எனினும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஏ.கே.சிங் ராணா, கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: