மனிதாபிமானமற்ற செயல்: தனியார் மருத்துவமனைகளைச் சாடிய தமிழக சுகாதார அமைச்சர்

மா.சுப்ரமணியன்

சட்டசபைக் கட்சித்தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது, இதில் ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது முதல் கொரோனா பரவலைத் தடுக்கும் முறைகள், மருத்துவமனைகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

 • Share this:
  இதில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் “12,500 படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடைசி நேரத்தில் தனியார் மருத்துவ மனைகள், நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புவது, மனிதாபி மானமற்ற செயல். கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள், சம்பாதிக்கும் நோக்கில் செயல்படக்கூடாது. 'ரெம்டெசிவிர்' தினசரி 20 ஆயிரம் குப்பிகள் வழங்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

  நேரு உள் விளையாட்டரங்கில், மூன்று கவுன்டர்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இன்று துவக்கப்பட உள்ளது.

  காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி இந்தக் கூட்டத்தில் கூறும்போது, “அனைத்து குடும்பங்களுக்கும், தலா 6,000 ரூபாய் வழங்க வேண்டும். கொரோனா தொற்று பரவல் கிராமங்களை சென்றடைந்து உள்ளது.

  சென்னை நந்தம்பாக்கத்தில் 800 படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது போன்ற வசதியை அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்க வேண்டும், என்றார்.

  பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, கூறும்போது, இரண்டாவது அலை கிராமங்கள் வரை பரவி உள்ளது. அரசு அறிவித்த முழு ஊரடங்கை, தீவிரப்படுத்த வேண்டும். செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், கட்டுமான பணி முடிந்துள்ளது. அதை, தமிழக அரசு பெற்று, அங்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவக்க வேண்டும் என்றார்.

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, முதல்வராக இ.பி.எஸ்., இருந்தபோது, கொரோனா உச்சகட்டம் 7,000 ஆக இருந்தது. தற்போது 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்த வேண்டும். ஆக்சிஜன் தட்டுப் பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும், என்றார்.

  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் தன் ஆலோசனையில், ‘கொரோனா பாதுகாப்பு மைய எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும்.' என்றார்.

  முன்னதாக சென்னை கிண்டி, கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, “தனியார் மருத்துவமனைகளில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதித்து கொள்கின்றனர். குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னையுடன் இருப்பவர்களை அனுமதிக்கின்றனர். பின், அவர்களுக்கு மூச்சு திணறல் வரும்போது அதற்கான ஆக்சிஜன் வசதி இல்லாமல், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர்.

  ஒவ்வொரு மருத்துவமனையும், அடிப்படை மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தி கொள்வது அவசியம். இதுபோன்ற சம்பவங்கள் மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் குறை கூறவில்லை. குறிப்பிட்ட சில தனியார் மருத்துவமனைகள் தான் இப்படி செய்கின்றன.அந்த மருத்துவமனைகளில், குறிப்பிட்ட அளவில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.
  Published by:Muthukumar
  First published: