கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு கடந்த 24 மணி நேரத்தில் 3.32 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட 2,263 பேர் மரணமடைந்திருப்பதும் புதிய உச்சமாக உள்ளது.
இந்நிலையில் டிவியில் லைவ் ஆன பிரதமருடனான மாநில முதல்வர்கள் சந்திப்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியிடம் தன் கோரிக்கைகளை நேரடியாகவே வைத்தார்.
“தயவு செய்து சார், உங்கள் வழிகாட்டுதல் தேவை. டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இல்லை என்பதற்காக டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் கிடையாதா?
மத்திய அரசில் யாரிடம் நான் பேசினால் விஷயம் நடக்கும் என்பதைக் கூறுங்கள், டெல்லி வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் டேங்கர் வேறு மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்?
மேற்கு வங்கம், ஒடிசாவிலிருந்து டெல்லிக்கு ஆக்சிஜன் அனுப்ப போன் கால் போடுங்கள் பிரதமரே, தயவு செய்து பிரதமர் மாநில முதல்வருக்கு போன் செய்து நிறுத்தப்பட்ட ஆக்சிஜன் டேங்கர்களை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள். நெருக்கடியைச் சமாளிக்க தேசியக் கொள்கையை வகுத்தெடுங்கள்” என்று பிரதமரிடம் கூறியுள்ளார்.
பொதுவாக இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட மாட்டாது, இதன் மூலம் கெஜ்ரிவால் தரம் தாழ்ந்து விட்டதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் கெஜ்ரிவால் மீது விமர்சனங்கள் வைத்து வருகின்றனர். அதாவது கெஜ்ரிவால் அரசியல் செய்கிறார் என்று குற்றம்சாட்டுகின்றனர்.
பிரதமர் மோடியுடனான கடந்த கூட்டத்திலும் கெஜ்ரிவால் கொட்டாவி விட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார் என்று பாஜக டெல்லி வட்டாரங்கள் பிரச்சினையை விடுத்து அவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையே
டெல்லி கங்காராம் மருத்துவமனையில் 2 மணி நேரம்தான் ஆக்சிஜன் இருப்பதாகவும் 60 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து என்றும் அறிவிப்பு விடுக்க மருத்துவமனைக்கு ஆக்சிஜன் டேங்கர் சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயன்பாட்டைப் பொறுத்து அடுத்த 6-7 மணி நேரத்துக்கு ஆக்சிஜன் கவலையில்லை என்று மருத்துவமனை நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.