கொரோனா தடுப்பூசிக்காக அரசியல் தலைவர்கள் வரிசைமுறையை மீற வேண்டாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை
கொரோனா தடுப்பூசிக்காக அரசியல் தலைவர்கள் வரிசைமுறையை மீற வேண்டாம்: பிரதமர் மோடி எச்சரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி
கார்ப்பரேட் போட்டிகள் மற்றும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னலம் சார்ந்த குழுக்கள் வதந்திகளைப் பரப்புவதில் ஆர்வம் காட்ட வாய்ப்பிருக்கிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அரசியல்வாதிகள் வரிசைமுறையை மீறி முண்டியடித்து முன்னால் செல்ல வேண்டாம் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
மாநில முதல்வர்களுடனான சந்திப்பில் பிரதமர் மோடி மேலும் கூறும்போது அரசு, இதற்காக முன்னுரிமையாளர்கள் பட்டியலை தயாரித்துள்ளது, முதற்கட்ட தடுப்பூசி இவர்களுக்கு போடப்பட வேண்டும், எந்த அரசியல் தலைவர்களும் கண்டிப்பாக தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வரிசைமுறையை மீறி வாக்சின் போட்டுக்கொள்ளக் கூடாது, அவர்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதல் முன்னுரிமை பட்டியலில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா பணிகளில் 2 கோடி முன்னிலைப் பணியாளர்கள் இருக்கின்றனர், அதாவது போலீஸ், பாதுகாப்பு வீரர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி இலவசமாகப் போடப்படவுள்ளது.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் அடுத்த முன்னுரிமைப் பட்டியலில் உள்ளனர். இதே கட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட நீண்ட கால நோய் உள்ள 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்குவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்படும்.
தொடக்கத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, தடுப்பூசி போடும் நடைமுறை அறிவியல் ரீதியான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பொய்ச்செய்திகளையும் வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் எச்சரித்தார்.
இது தொடர்பாக பாஜக தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தடுப்பூசி திட்டம் தொடர்பான வதந்திகள் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கார்ப்பரேட் போட்டிகள் மற்றும் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தன்னலம் சார்ந்த குழுக்கள் வதந்திகளைப் பரப்புவதில் ஆர்வம் காட்ட வாய்ப்பிருக்கிறது. எச்சரிக்கையாக இருப்போம்” என்று பிரதமர் மோடி கூறியதாக பதிவிட்டுள்ளது.
மேலும் இந்தக் கூட்டத்தில் 9 மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ள பறவைக்காய்ச்சல் குறித்தும் உரையாடினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.