போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது - பிரதமர் மோடி

போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

நாடு முழுவதும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

  • Share this:
    நாடு முழுவதும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

    இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ளது. நாளுக்கு நாள் புதிய உச்சம் நிலவுகின்றது. இதனால், வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று மாநில ஆளுநர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், “10 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மைல் கல்லை வேகமாக எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. கடந்த 4 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திருவிழாவில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, புதிய தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவுக்கு தடுப்பூசி நாடு முழுவதும் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.

    சென்ற ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. அதை இந்த ஆண்டும் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் சமூக குழுக்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு ஆளுநர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

    மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய ஆளுநர்கள் தீவிரமாக செயல்படலாம். தங்கள் சமூக நெட்வர்க் மூலம் ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர்கள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகரிக்க முடியும். தடுப்பூசி, சிகிச்சை போன்றவை தொடர்பான செய்திகளை பரப்பி, ஆயுஷ் தொடர்பான பரிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடனான சந்திப்புகள் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.

    இதில், மக்கள் பங்கேற்பதில் ஆளுநர்கள் ஒரு முக்கிய தூணாக இருப்பதுடன், மாநில அரசுகளுடன் இணைந்தும், அரசை வழிநடத்தியும் ஆளுநர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மாநிலங்கள் தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்த முடியும்.” இவ்வாறு கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சென்ற ஆண்டு நாம் கற்றுக்கொண்ட பாடத்தில் மிகவும் முக்கியமானது, இணைந்து செயல்படுவதன் மூலம் தொற்றை ஒழிக்க முடியும் என்பதாகும். அந்தவகையில் நமது அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்” எனறார்.

    Must Read :  தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது

     

    கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஹர்ஷவர்தன் ஆகியோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: