PM Modi : தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தைக் குறைக்கக்கூடாது : பிரதமர் மோடி அறிவுறுத்தல்

பிரதமர் மோடி

மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மோசமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும், லட்சக்கணக்கானோர் தொற்றால் பதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் பிரதமர் மோடி, இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் சுகாதாரத்துறை உள்ளிட்ட தரப்பினருக்கும் தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    அந்தவகையில், மத்திய அமைச்சர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலங்களில் கொரோனா நிலவரம், கொரோனா தடுப்பூசி பணிகளின் வேகம், மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.

    இதில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகளை கொண்டிருக்கும் 12 மாநிலங்கள் மற்றும் அதிக பாதிப்புகளை கொண்டிருக்கும் மாவட்டங்கள் குறித்து அப்போது விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி பணிகள் குறித்தும், அடுத்த சில மாதங்களில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அத்துடன் மாநிலங்கள் வாரியாக வீணாகும் தடுப்பூசி அளவு குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில், இதுவரை 17.7 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரில் 31 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் கையிருப்பு குறித்தும் பிரதமர் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி அதிகரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து அமைச்சர் குழுவினர் விளக்கினர்.

    மேலும், மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது. அத்துடன் விரைவான மற்றும் முழுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்புக்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் வழங்கினார். அந்தவகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தை குறைக்க மாநிலங்கள் அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

    இந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுகாதார ஊழியர்களை வேறு பணிகளுக்கு மாற்றக்கூடாது எனக்கூறிய பிரதமர் மோடி, ஊரடங்கு நடைமுறைகள் இருந்தாலும் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மாநிலங்களுக்கு உதவி மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    Must Read : சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை

     

    காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை அமைச்சர்கள் மற்றும், மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
    Published by:Suresh V
    First published: