HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»pm modi rolls out worlds largest vaccination drive for covid 19 yuv

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கினாலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பது அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை மக்கள் மறந்துவிடக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதமாக, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அந்த வகையில், முதற்கட்டமாக நாடு முழுவதும் சுமார் மூவாயிரம் மையங்களில், 3 கோடி முன்கள பயணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை டெல்லியில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பிற தடுப்பூசிகளை தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறினார். ஒரு மாத இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது கட்டாயம் என குறிப்பிட்ட பிரதமர், இரண்டாம் கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். தடுப்பூசிகளை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களை பாராட்டுவதாகவும், உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளது எனவும் பிரதமர் மோடி கூறினார்.





தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கினாலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிப்பது அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் முதல் தடுப்பூசி, டெல்லியை சேர்ந்த தூய்மை பணியாளர் மணீஷ் குமாருக்கு, எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்தப்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இதேபோல், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனாவாலா, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

 

இந்தியாவில் தொடங்கியிருக்கும் தடுப்பூசி திட்டம், உலகின் மிகப்பெரிய நோய் தடுப்பு பிரச்சாரம் என்றும், இதுபோன்ற பிரச்னைகளை கையாள்வதில் நம் நாட்டுக்கு அனுபவம் உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். போலியோ, பெரியம்மையை நாம் ஒழித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசிக்கு கரவொலி எழுப்பி செவிலியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததை தொடர்ந்து, மும்பை காத்கோபர் பகுதியில், பட்டாசு வெடித்தும், கொரோனா உருவ பொம்மையை எரித்தும் பாஜக தொண்டர்கள் கொண்டாடினர்.

இதேபோல், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், கர்நாடகா உட்பட அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
Published by:Yuvaraj V
First published: