PM MODI CHAIRS HIGH LEVEL MEET AMID SURGE IN CORONAVIRUS CASES VAI
Coronavirus | கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.. பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்
பிரதமர் மோடி
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணியின் கள நிலவரம் ஆகியவை குறித்து, பல்வேறு துறை செயலர்கள் உட்பட மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில், பிரதமரின் முதன்மை செயலர், அமைச்சரவை செயலர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது பற்றியும் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நடத்தை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளதாக பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவலுக்கான மூன்று முக்கிய காரணங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவற்றில் முதலாவது முகக்கவசத்தை முறையாக அணியாததாகும்., தனிமனித இடைவெளி போன்ற பழக்கவழக்கங்களை மக்கள் முறையாக பின்பற்றாதது மூல காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்று பரவும் பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பதில் மாநிலங்களிடையே ஏற்பட்டுள்ள சுணக்கமும் நோய் பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.