கொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வருவதால், சட்டப்பேரவை குளிர்காலக் கூட்டத் தொடரை இடமாற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சம்: மாற்று இடத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனை
தமிழக அரசு தலைமைச் செயலகம்
  • Share this:
தமிழகத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் மார்ச் 24ம் தேதியே அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

சட்டப்பேரவை விதிகளின்படி வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டுவது பற்றியும், தற்போது கொரோனா பரவலின் காரணமாக சட்டப்பேரவைக்குள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால், மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் 6 முறை தமிழக சட்டப்பேரவை மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளன.

விடுதலைக்கு முன்பு அதாவது, 1921 முதல் 1937ம் ஆண்டு வரை சட்டசபையின் முன்னோடி சபையானது புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேலவை மண்டபத்தில் கூடியுள்ளது. அதேபோல், 1937 ஜூலை மாதத்தில் இருந்து, அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் வரை தற்போது நூற்றாண்டு விழா மண்டபமாக அறியப்படும், சேப்பாக்கம் செனட் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு 1938 ஜனவரியில் இருந்து 1939 அக்டோபர் வரை ராஜாஜி மண்டபமான விருந்தினர் மாளிகையில் பேரவை செயல்பட்டுள்ளது. 1946 மே மாதத்தில் இருந்து நாட்டின் விடுதலைக்கு பிறகு 1952ம் ஆண்டு வரை புனித ஜார்ஜ் கோட்டையின் பேரவை மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.


இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1952 மே மாதத்தில் இருந்து 1956 டிசம்பர் வரை தற்போதைய கலைவாணர் அரங்கமாக அறியப்படும் புதிய சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு 1959 ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை 11 நாட்கள் உதகையில் உள்ள அரண்மூர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. ஓமந்தூரார் அரசு வளாகத்தில் புதிய சட்டப்பேரவை இயங்கியபோது, அங்கு 2010 மார்ச் முதல் 2011 மார்ச் வரையும் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது.

Also read: தமிழகத்தில் இதுவரை 31 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு

தற்போது இருக்கும் சட்டமன்றம் சிறிய அளவிலானது என்பதால், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சுழல் நிலவுகிறது. எனவே இந்த மாதம் இறுதிக்குள் ஆலோசனை நடத்தி மாற்று இடத்தைத் தேர்வு செய்ய சட்டப்பேரவை செயலகமும், தமிழக அரசும் முடிவெடுத்துள்ளன. சென்னையில் மாற்று இடமாக சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கம் அல்லது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading