கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது. கொரோனா தொற்று பரவலை 21 நாட்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை.
தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை. தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது.
தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவில் இரவு நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் இரவு 8 மணியில் இருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை, மால்கள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும். ஹோம் டெலிவரி மற்றும் அத்யாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளுக்கு அனுமதி காய்கறி சந்தை, கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க விதிகள் அறிவிக்கப்படும், திரைப்பட சூட்டிங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சினிமா தியேட்டர்கள் மூடப்படும், வார இறுதி நாட்களில் அத்யாவசிய பணிகள் தவிர்த்து பிற நடவடிக்கைகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து 50% அளவுடன் மட்டுமே இயங்கும், அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். உகந்த காரணம் இன்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள் மூடப்படும். பேப்பர் போடுபவர்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முடிதிருத்தும் நிலையங்கள், ஸ்பா, பியூட்டி பார்லர்கள் மூடப்படும். பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பை தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Must Read : கொரோனாவால் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
இந்நிலையில்,
கொரோனா ஒருநாள் பாதிப்பில் மீண்டும் உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 24 மணி நேரத்தில் 93,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.