என் தாயார் இறந்து விடுவார்: ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்.. போலீஸாரிடம் கதறிய மகன்: வைரலான வீடியோ

வைரல் வீடியோ. ஆக்சிஜனுக்காக் போலீஸ் காலில் விழுந்த நபர்.

உத்தரப் பிரதேசம், ஆக்ராவில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம், என் தாயார் இறந்து விடுவார் என்று போலீசாரிடம் காலில் விழுந்து மன்றாடிய ஒரு நபரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அது ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியான சிலிண்டர்கள் என்று போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  உத்தரப் பிரதேசம், ஆக்ராவில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்ல வேண்டாம், என் தாயார் இறந்து விடுவார் என்று போலீசாரிடம் காலில் விழுந்து மன்றாடிய ஒரு நபரின் வீடியோ வைரலாகியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கானஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது, அதுவும் குறிப்பாக உ.பி.யில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகம் என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் தன் தாயார் இறந்து விடுவார், தயவு செய்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள் என்று ஒரு நபர் போலீசாரிடம் மன்றாடிய காட்சி பலரது இதயத்தையும் உலுக்கியுள்ளது.

  திங்களன்று சதாரில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

  இந்த வீடியோவில் ஆம்புலன்ஸ் அருகே ஒரு நபர் பிபிஇ கவச உடையில் நின்று கொண்டிருக்கிறார், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பாதுகாப்பாக காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. அப்போதுதான் அந்த நபர் போலீசார் காலில் விழுந்து ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்ல வேண்டாம் என் தாயார் இறந்து விடுவார் என்று கதறினார்.

  “தயவு செய்யுங்கள் சார், நான் எப்படி சிலிண்டருக்கு ஏற்பாடு செய்வேன். என் தாயாரை மீட்டுக் கொண்டு வருவேன் என்று என் குடும்பத்தினரிடம் சபதம் செய்திருக்கிறேன், ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் செல்லாதீர்கள்” என்று கதறினார் அந்த நபர். போலீசார் தங்கள் வேலையைப் பார்த்தனர், அருகில் இருந்த ஒருவர் கதறிய நபருக்கு ஆறுதல் அளித்தார்.

  போலீசார் கூறுவதென்ன?

  ஆனால் போலீசார் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை எடுத்துச் செல்லவில்லை என்றும் காலி சிலிண்டர்களையே எடுத்துச் சென்றதாகவும் ஆக்ரா போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆக்ரா எஸ்.பி. ட்விட்டர் வீடியோவில் கூறும்போது, “ஆக்ராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு 2 நாட்களுக்கு முன்பு இருந்தது. மக்கள் தங்கள் சொந்த சிலிண்டர்களை மருத்துவமனைக்குக் கொடுத்தனர். வீடியோவில் இரண்டு பேர் காலி சிலிண்டர்களைத்தான் எடுத்துச் செல்வதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த நபர் தன் தாயாருக்கு சிலிண்டர் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் யாரும் ஆக்சிஜன் நிரம்பிய சிலிண்டரை ஆஸ்பத்திரியிலிருந்து எடுத்துச் செல்லவில்லை .

  இத்தகைய வீடியோக்கள் மக்களை திசைத்திருப்புவதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது” என்றார்.
  Published by:Muthukumar
  First published: