பஞ்சாயத்துத் தேர்தலினால் உ.பி.யில் 1,919 போலீஸாருக்கு கொரோனா தொற்று

பஞ்சாயத்துத் தேர்தலினால் உ.பி.யில் 1,919 போலீஸாருக்கு கொரோனா தொற்று

தேர்தல் பணியில் உபி. போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 கட்டமாக பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிகின்றது. இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய போலீஸார் 1,919 பேருக்கு கடந்த இருவாரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலத்தில் 4 கட்டமாக பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ம் தேதி முடிகின்றது. இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் பணியாற்றிய போலீஸார் 1,919 பேருக்கு கடந்த இருவாரங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்.

  நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தலைவிரித்தாடும் சூழ்நிலைகளுக்கு ஆங்காங்கே நடந்த தேர்தல்களும் காரணம். இதில் உ.பியில் பஞ்சாயத்து தேர்தல் வேறு நடந்து கொண்டிருக்கிறது இதில் 1,919 போலீசார் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது முதல் இரண்டு கட்ட தேர்தல் நிலவரமாகும்.

  இவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் அறிகுறிகள் இருந்ததையடுத்து டெஸ்ட் செய்யப்பட்டது. சிலருக்கு கோவிட் நெகெட்டிவ் என்று வந்தாலும் அவர்களுக்கு கோவிட் நோய் அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

  இதன் மூலம் இதுவரை மொத்தமாக உ.பி.யில் கொரோனாவில் 14,644 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12,631 பேர் குணமடைந்துள்ளனர். 94 பேர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக பலியாகினர். இப்போது 1,919 போலீசார் இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

  தேர்தல் நேரத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் வாக்காளர்கள் நடந்து கொண்டதால் போலீசாருக்கு தொற்றியதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  பஞ்சாயத்து தேர்தலை தேவையில்லாமல் நடத்தி போலீசார் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலை அதிகப்படுத்தியுள்ளனர் என்கின்றனர் அங்குள்ள கிராம மக்கள். ஆனால் இதே கிராம மக்கள்தான் கோவிட் 19 கட்டுப்பாடுகளை மதிக்காமல் நடந்து கொண்டனர் இதனால் போலீசாருக்கு கொரோனா தொற்றியதாக போலீசார் குற்றம்சாட்டுகின்றனர்.

  பாதிக்கப்பட்ட போலீசாரில் பெரும்பாலும் கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆவார்கள். லக்னோவில் அதிகம் போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்னோவில் 140 போலீசாருக்கு கொரோனா பாசிட்டிவ்.

  உ.பி.யில் இரண்டாம் அலை மூத்த போலீஸ் அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை இவர்களில் பலரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். உ.பி. டிஜிபி அலுவலக வட்டாரங்களின் தகவலின் படி டிஜிபி ஹிதேஷ் சந்திரா உட்பட 13 அதிகாரிகளுக்கு கொரோனா பாசிட்டிவ்.

  போலீசார் தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

  ஏப்ரல் முடிவதற்குள் இந்தியாவின் கொரோனா மையமாக உத்தரப் பிரதேசம் மாறிவிடும் என்று மத்திய அரசு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
  Published by:Muthukumar
  First published: