மூதாட்டியை கடித்துக்கொன்ற நபர்...! தனிமைப்படுத்தப்பட்டதால் மன ரீதியான பாதிப்பா?

மூதாட்டியை கடித்துக்கொன்ற நபர்...! தனிமைப்படுத்தப்பட்டதால் மன ரீதியான பாதிப்பா?
  • News18
  • Last Updated: March 28, 2020, 3:54 PM IST
  • Share this:
தேனி மாவட்டத்தில் கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்தப்பட்ட நபர், தெருவில் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் வந்தவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களது வீட்டில் எச்சரிக்கை செய்யும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இவ்வாறு தனிமைப்படுத்தலால் அவர்கள் மன ரீதியான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தேனியில் திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியுள்ளது.


தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது ஜக்கமநாயக்கன்பட்டி. இக்கிராமத்தில் வசிக்கும் மணிகண்கடன் (வயது 32) என்ற இளைஞர், இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக சொந்த ஊர்க்கு வந்தவரை மாவட்ட சுகாதாரத்துறை, வீட்டுக்கண்காணிப்பில் வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், பக்தசேவா தெருவில் தனது வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த 90 வயது மூதாட்டியான நாச்சியம்மாளை கழுத்தில் கடித்துள்ளார். நாச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், மணிகண்டனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களையும் மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அனைவரும் சேர்ந்து மணிகண்டனை பிடித்து கயிற்றால், கால் மற்றும் கைகளை கட்டிப்போட்டனர். படுகாயமடைந்த நாச்சியம்மாள், போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி கானவிலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மணிகண்டன், கொரோனா கண்காணிப்பில் இருப்பதால், உடனடியாக, போடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இன்று காலை படுகாயமடைந்த நாச்சியம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது தொடர்பாக போடி போலீசாரிடம் பேசிய போது, “மூதாட்டியை கடித்த போது, அருகே இருந்த மக்கள் உடனடியாக மணிகண்டனை பிடித்துக் கட்டிப்போட்டனர். அவரது கையில், சுகாதாரத்துறையின் சீல் வைக்கப்பட்டிருப்பதை வைத்தே, அவர் கொரோனா கண்காணிப்பில் இருப்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டது போல நடந்துகொண்டார்.

தற்போது மூதாட்டி இறந்துள்ள நிலையில், மணிகண்டன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் ஆலோசனை பேரில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

கொரோனா கண்காணிப்பில் இருந்த மணிகண்டன், தெருவில் சுற்றித்திருந்தது மட்டுமல்லாமல், வீட்டு வாசலில் படுத்திருந்த மூதாட்டியை கடித்து கொலை செய்த சம்பவம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தைத்த தமிழக முதல்வர், கொரோனா நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். அப்போது, ”வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கு என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள்?” என கேள்வி முன்வைக்கப்பட்டது.

”அதற்காகத்தான் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்புகொண்டால், தேவையான உதவிகளை செய்துகொடுப்பார்கள்” என்று முதல்வர் பதிலளித்தார்.






இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube



First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading