Home /News /coronavirus-latest-news /

வல்லரசு நாடுகளையே புரட்டிய கொரோனா... அசால்ட் ஆக ’டீல்’ செய்யும் இந்திய மாநிலம்...!

வல்லரசு நாடுகளையே புரட்டிய கொரோனா... அசால்ட் ஆக ’டீல்’ செய்யும் இந்திய மாநிலம்...!

கொரோனா

கொரோனா

வெளிநாடுகளில் இருந்து வருவோர், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தினர். மேலும் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு 15வது நாள் ரூ.15,000 ஊக்கத்தொகை என அறிவிப்பு வெளியிட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கொரோனாவை எதிர்கொள்ள வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமாக கொரோனா தடுப்பு பணிகளில் முன் வரிசையில் ஒடிசா மாநிலம் நிற்கிறது.

  2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து என வல்லரசுகளை மிரட்டி வருவதுடன், உலகம் முழுவதும் தனது தடத்தை பதித்துள்ளது. கொரோனாவுக்கு மருந்துகள் இல்லாத நிலையில், பரவுவதலை தடுப்பது ஒன்றே தீர்வாக உள்ளது. பேரிடர்களை எதிர்கொள்வதில் வேறு எந்த மாநிலத்தை விடவும் அதிக அனுபவம் பெற்ற மாநிலம் ஒடிசா.

  மார்ச் 13 -ம் தேதி ஒடிசாவில் பேரிடர் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் ஒடிசாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மார்ச் 16-ம் தேதி தான். இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  வதந்திகளை தடுக்க ஒடிசா திறன் மேம்பாட்டு கழக தலைவர் சுப்ரதோ பாக்ஷி, அரசு தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் நாள்தோறும் ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு அரசின் தகவல்களை கொண்டு சேர்க்கிறார். வெளிநாடுகளில் இருந்து வருவோர், அரசின் செயலி மற்றும் இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொண்டு, 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

  இதற்காக 15வது நாள் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது அறிவிப்போடு நிற்கவில்லை, அமெரிக்காவில் இருந்து திரும்பிய தனது சகோதரி குறித்து செயலியில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிவு செய்தார்.

  முதலமைச்சரே பதிவு செய்த நிலையில், வெளிநாடு சென்று திரும்பிய அதிகாரிகளும் தங்களை பதிவு செய்தனர். இப்போது மக்கள் முன்வந்து பதிவு செய்ய தொடங்க, இந்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டியுள்ளது. ஐந்தாயிரம் பேரில் 70 விழுக்காட்டினர் குறிப்பிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

  பிரதமர் மோடி ஒருநாள் மக்கள் ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே இந்த 5 மாவட்டங்களும் முழுமையாக முடக்கப்பட்டன. மக்களை எந்த வகையிலும் தவிக்க விடாமல் படிப்படியாக முழுமையாக முடக்கப்பட்டன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 மாதங்களுக்கான அரிசி வழங்கப்பட்டன. 4 மாதங்களுக்கான முதியோர் உதவித்தொகை வீடுதேடிச் சென்றது.

  நடைபாதை வியாபாரிகளுக்கு தலா மூவாயிரம் ரூபாய், கட்டடத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்பட்டது.

  கொரோனா நோயாளிகளுக்காக தனி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. ஒடிசாவில் உள்ள சுமார் ஏழாயிரத்து 500 கிராம பஞ்சாயத்துகளிலும் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒடிசாவில் கொரோனா தடுப்புப்பணிகளில் 2 தமிழர்களே முன்வரிசையில் நிற்கிறார்கள்.

  ஒருவர் முதலமைச்சரின் தனிச்செயலாளர் வி. கார்த்திகேய பாண்டியன், மற்றொருவர் முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன். இருவரும் மதுரைக்காரர்கள். புயல், வெள்ளம் என தொடர்ந்து பேரிடர்களை வெல்லும் ஒடிசா, கொரோனாவையும் வென்று வாகை சூடும் என்பது அதன் நடவடிக்கைகளிலேயே வெளிப்படுகிறது என்றால் அது மிகையல்ல.

  Also see...  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, Odisa

  அடுத்த செய்தி