கொரோனாவிலிருந்து மீண்டு வரும் பட்டியலில் இந்தியா முதலிடம்..!

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் பட்டியலில் இந்தியா முதலிடம்..!

கோப்புப் படம்

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவந்தவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால் தொற்றில் இருந்து மீண்டுவரும் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

  இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும் உலகளவிலான பாதிப்புகளில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.19 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 71.39 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

  இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில், கடந்த 24 மணி நேரத்தில் 50,129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மீண்டுவந்தவர்களின் எண்ணிக்கை 62,000 உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் பட்டியலில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1,126 அரசு பரிசோதனைக் கூடங்கள் மற்றும் 877 தனியார் மையங்கள் உள்பட 2,003 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், கடந்த 22ம் தேதி வரை மட்டுமே 10 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அதேபோல், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏழு லட்சத்தைத் தாண்டாமல் கட்டுக்குள் இருப்பதாகவும், உயிரிழப்பு விகிதம் 1.51 சதவீதமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உயிரிழந்தோர் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, மொத்த குணமடைந்தோரின் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் குணமடைந்து வருகின்றனர்.

  பண்டிகை காலகட்டம் என்பதால், கொரோனா வைரஸ் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  Published by:Rizwan
  First published: