கொரோனா ஊரடங்கு அச்சம் : சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்..

கொரோனா ஊரடங்கு அச்சம் : சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்..

கொரோனா

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் சிறு, குறு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

  • Share this:
    தொழில் நகரமான கோவையில் அனைத்து விதமான தொழில்களுக்கும் அடிப்படையான தொழிலாக வார்ப்பட தொழில் இருந்து வருகின்றது. இந்த துறையில் 400க்கும் மேற்பட்ட சிறு, குறு வார்ப்பட ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், அவர்களில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    கடந்த முறை ஊரடங்கு அறிவிக்கபட்ட போது நீண்ட போராட்டங்களுக்கு பின்பு சொந்த ஊர் சேர்ந்த இவர்கள், சமீபத்தில் தான் மீண்டும் வேலைக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு ஆலைகளுக்கு திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரொனா இரண்டாவது அலை பரவும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    மீண்டும் ஊரடங்கு அறிவித்தால் திரும்பி ஊருக்கு போக முடியாது என்கிற அச்சத்தால் அவர்கள் தற்போதே போகத் தொடங்கிவிட்டதாகவும், அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அவசியம் எனவும் வணிகர்கள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே ரயில், போக்குவரத்து முழுமையாக இல்லாத நிலையில் மீண்டும் ஊரடங்கு என்றால் உரிய போக்குவரத்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்று தொழிலதிபர் தனபால் தெரிவித்தார்.

    Must Read : ரயில் சேவை குறைப்பா... பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தேவையா? : ரயில்வே வாரியம் விளக்கம்

     

    மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக நெருக்கடியில் சிக்கியிருக்கும் கோவை தொழில்முனைவோருக்கு, வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவது கூடுதல் அச்சத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது..
    Published by:Tamilmalar Natarajan
    First published: