தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை - விஜயபாஸ்கர் விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர்
  • News18
  • Last Updated: February 3, 2020, 8:53 AM IST
  • Share this:
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வு மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதில், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் கவச உடைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னையில் 10 பேரும், திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இல்லை என்றும் தெரிவித்தார்.


சீனா மற்றும் கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.

கிண்டி கிங்ஸ் ஆய்வு மையத்திற்கு ரத்த மாதிரிகளை கொண்டு வந்த 48 மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் எனக் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், இதனால் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் நோய் பாதிப்பை, வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பியதும், சோப்பு மூலம் கையை கழுவதன் மூலம் தடுக்க முடியும் என்றார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் வழங்குவதற்கான கவச உடைகள் தேவையான அளவு இருப்பதாகவும், மருந்துகளும் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்