கர்நாடகாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்... பெங்களூருவில் சுகாதார நெருக்கடி : சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

கொரோனா வைரஸ்

கர்நாடகா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். மேலும் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கர்நாடகா மாநிலத்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார். மேலும் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், “கர்நாடகாவில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், கொரோனா 2ஆவது அலையில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இது எப்படி வந்தது, எந்த வடிவத்தில் இருக்கிறது, எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த கொரோனா 2ஆவது அலையில் இது உருமாற்றம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  உருமாற்றம் அடைந்த வைரஸ் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. உருமாற்றம் அடைந்த வைரஸ் பரவும் நிலை இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் அபாயகரமானது. இரட்டை உருமாற்றம் அடைந்த வைரசை தடுக்கவே நாம் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறோம்.

  மாநிலத் தலைநகர் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் 13 அரசு மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு பிற நோய் பாதிப்பு உள்ள, அவசர நோயாளிகளுக்கு மட்டுமே படுக்கைகள் வழங்கப்படுகிறன. பிற படுக்கைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

  பெங்களூருவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் 7 ஆயிரம் படுக்கைகள் வரை உள்ளன. 30 படுக்கைகளுக்கு மேல் கொண்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொது வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் படுக்கை வார்டு என அனைத்து படுக்கைகளையும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன்.

  198 வார்டுகளுக்கு தலா 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியார் ஆம்புலன்சுகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. சட்டவிரோதமாக அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்சுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், அனைத்து மருத்துவ கல்லூரிகளும் கொரோனா தடுப்பு பணியில் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

  மக்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால், ஆக்சிஜன் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்படும். பெங்களூருவுக்கு 40 டன் ஆக்சிஜன் வந்துள்ளது. அத்துடன், 40,500 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்களும் வந்துள்ளன.

  மாநிலத்தில், கடந்த 40 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக எந்த புகாரும் வரவில்லை. அனைத்து அதிகாரிகளும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சில குறைபாடுகள் இருப்பது அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

  இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர்,  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  Must Read :  மகாராஷ்டிரா கோவிட் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து - 12 பேர் உயிரிழப்பு

   

  அப்போது, “கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நிலைமை எல்லை மீறி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்களை நான் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உருக்கமாகக் கூறினார்.
  Published by:Suresh V
  First published: