தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய, புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய்வில் தெரியவந்தது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்தன.
இதற்கிடையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று இருக்கின்றதா என்பதை கண்டறிய அவர்களின் சளி, ரத்த மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உருமாறிய கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 15பேருக்கு கொரோனா இல்லை என்றார்.
மேலும், தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு குறைவாகவே இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.