தடுப்பூசியிலிருந்து தப்பிக்கும் வகையிலான புதிய கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தடுப்பூசியிலிருந்து தப்பிக்கும் வகையிலான புதிய கொரோனா வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மாதிரி படம்

இங்கிலாந்தில், தடுப்பூசியிலிருந்து தப்பிக்கும் வகையிலான கொரோனா வைரஸ் உருவாகக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

 • Share this:
  ஒரு வைரஸின் மரபணுவில் சில மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகை வைரஸாக பரவுவது மியூடேஷன் (Mutation) எனப்படுகிறது. கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. முதன்முதலில் சீனாவின் ஊஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவிய வைரஸில் இருந்து வேறுபட்டது. பரவும் பகுதிக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டதாக விஞ்ஞானிகள் கூறினர். பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட D614G என்னும் வகை கொரோனா வைரஸ் தான் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

  A222V என்னும் கொரோனா வைரஸின் மற்றொரு வகை ஸ்பெயினில் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள் மத்தியில் பரவத் தொடங்கி ஐரோப்பா முழுவதும் படிப்படியாக தொற்றியது. தற்போது இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் ஆரம்ப கட்ட ஆய்வு முடிவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன்படி புதிய வகை வைரஸில் முந்தைய வைரஸ் வகையிலிருந்து 17 முக்கியமான மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

  வைரஸில் உள்ள ஸ்பைக் புரோட்டீன் என்னும் பகுதியே மனித செல்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி வைரஸ் மனித உடலில் பரவ வழிவகுக்கிறது. புதிய வைரஸில் இந்த ஸ்பைக் புரோட்டீனில் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வகை வைரஸ் தொற்று நோய் பரவலை இரு மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனாவின் ஸ்பைக் புரதத்தில் சில பகுதிகள் விடுபட்டிருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

  இந்த விடுபட்ட பகுதிகளால் மனித உடலில் உள்ள ஆன்டிபாடிகள் வைரஸை தாக்கும் செயல்திறன் குறைந்து போகும் என்கின்றனர் விஞ்ஞானிகள். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக உள்ள ஒரு மனிதனின் உடலில் புகுந்த கொரோனா வைரஸ், தன்னை உருமாற்றிக் கொள்ளும் களமாக அந்த மனிதனை பயன்படுத்திக் கொண்டு இந்த புதிய வகை கொரோனா உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

  இங்கிலாந்தில் முதன்முதலில் செப்டம்பர் மாதத்தில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. நவம்பர் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 25 சதவீதம் பேர் புதிய வகை வைரஸை கொண்டவர்களாக இருந்தனர். டிசம்பர் மாத மத்தியில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் இந்த வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

  உலகெங்கிலும் உள்ள வைரஸ் மாதிரிகளின் மரபணு குறியீடுகளை கண்காணித்து வரும் நெக்ஸ்ட் ஸ்ட்ரெய்ன் (Next strain) என்னும் அமைப்பு, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ் இங்கிலாந்தில் இருந்து பரவியதாகக் கூறுகிறது. நெதர்லாந்திலும் இதே போன்ற வைரஸின் பாதிப்பு பதிவாகியுள்ளது.

  ஸ்பைக் புரதத்தின் சில பகுதிகள் மாறினாலும் தடுப்பூசி பலன் தரும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், வைரஸின் வகை மாறிக்கொண்டே போவது ஆபத்தானது என்கின்றனர். தடுப்பூசியில் இருந்து தப்பிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ்கள் உருவாகலாம் என்று எச்சரிக்கும் ஆய்வாளர்கள், அதற்கான பாதையில் கொரோனா வைரஸ் இரண்டு கட்டங்களை கடந்து விட்டதாக கூறி அதிர்ச்சியூட்டுகின்றனர்.

  உலகெங்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தன்னை உருமாற்றிக் கொண்டு அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகி விட்டது கொரோனா வைரஸ். பாதிப்பு குறைந்து விட்டது என அலட்சியம் காட்டாமல் அடுத்த தாக்குதலை சமாளிக்க நாமும் தயாராக வேண்டும்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: