மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் ஆகியோர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி கூறியதாவது, ”தமிழகத்தில் கொரோனா பரிசோதனை இதுவரை எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்களை தமிழக அரசு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை அந்தப் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ஜூன் 7ம் தேதி நிலவரப்படி இதுவரை மதுரையில் 14,102 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை என்பது தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை விட மிகக் குறைவு.
மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனையின் அளவு மாநில அளவில் 6,420ஆக உள்ளது. ஆனால், மதுரையின் அளவு அதில் சரிபாதியாகத்தான் உள்ளது. அதாவது, 3,975 மட்டுமே. பிற மாவட்டங்களை ஒப்பிட்டால் 30ஆவது இடத்தில் மதுரை இருக்கிறது. இது மிக மிக அதிர்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது.
தென் மாவட்டங்களின் மையமாக உள்ள மதுரையில் தென் மாவட்டங்களிலே மிகக்குறைந்த அளவு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் மதுரையில் ஒவ்வொருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்திவிட்டு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று ஊடகங்களில் கூறினார். அதை உண்மை என்று நாமும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைக்கு தமிழக அரசு அறிவித்துள்ள புள்ளிவிவரம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. போதுமான பரிசோதனைகள் மதுரையில் எடுக்கப்படவில்லை. எனவே, மதுரை மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட ஆட்சியரிடம் நாம் எவ்வளவு பிந்தங்கியுள்ளோம் என்பதை எடுத்துக் கூறியுள்ளேன்.
கடந்த 10 நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு 250 டெஸ்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதில் உடனடியாக மாற்றம் தேவை. கடந்த 10 நாட்களில் சுமார் பத்தாயிரம் பேர் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இன்றிலிருந்து தினசரி 3 ஆயிரம் டெஸ்டுகள் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்து வரும் வாரங்களில் மதுரையில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துவிடும்.
ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி தொற்று பரவலாக்கத்தைத் தடுப்பதுதான் நோய் பாதிப்பில் இருந்து மக்களை மீட்பதற்கான ஒரே வழி. வரும் நாட்களில் மாவட்ட நிர்வாகம் சோதனைகள் செய்வதில் முழுவேகத்துடன் செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Madurai, Su venkatesan