நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றுவரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 873 ஆக இருந்தது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் மற்றும் நாகையை சேர்ந்த 2 பேர் மற்றும் சீர்காழியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 டாக்டர்கள், 4 கர்ப்பிணிகள் உள்பட 52 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் உதவியாளருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் நாள் ஒன்றுக்கு 50 பேர் வீதம் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதையடுத்து மாவட்டத்தில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 917 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த 69 வயதான முதியவர் கடந்த 26ஆம் தேதி காய்ச்சலுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்தம் மற்றும் சளிமாதிரிகள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான 475 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இன்னும் 431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவர் அன்சாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. நாகையில் பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரிடம் சிகிச்சை பார்த்த நோயாளிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.